வடகொரியாவை வாட்டியெடுக்கப்போகும் பஞ்சம்

By எஸ்.எஸ்.லெனின்

தனது அணு ஆயுதங்களை முன்வைத்து, உலகின் பெரியண்ணன் அமெரிக்காவையே புலம்பவிடும் தேசம் வடகொரியா. ஆனால், அந்த ஆயுதங்களுக்காக அள்ளிவிட்டதில் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் விழுந்திருக்கிறது. கரோனா வைரஸ் மீதான அச்சத்தாலும், நாட்டைப் புரட்டிப்போட்ட இயற்கைப் பேரிடர்களாலும் வட கொரியாவின் நிலைமை மேலும் மோசமாகி உள்ளது. அவற்றிலிருந்து மீள, குடிமக்களின் வயிற்றிலடிக்கும் விநோதமான யோசனையை முன்வைத்திருக்கிறார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

கரோனா அச்சத்தில் கதவடைப்பு

வடகொரியாவின் ஒரே நட்பு தேசம் சீனா. சகலத்துக்கும் சீனாவைச் சார்ந்திருக்கும் வடகொரியாவுக்கு, கோவிட்-19 இறப்புகள் சீனாவில் தென்பட்டதும் திண்டாட்டமானது. விவசாய இடுபொருட்கள், எரிபொருள், உணவு ரகங்கள், மருந்துப் பொருட்கள் என வடகொரியாவின் தலையாயத் தேவைகள் அனைத்துமே சீனாவை நம்பியிருந்தன. ஆனால், சீனாவில் வைரஸ் பரவல் என்றதுமே வடகொரிய அதிபர் கிம் உடனடியாக தேசத்தின் எல்லைகளை அடைக்க உத்தரவிட்டார். இறக்குமதிக்குத் தடை விதித்ததில் உணவுப் பொருள் தட்டுப்பாடு தலைகாட்ட ஆரம்பித்தது. விவசாய உற்பத்திக்கான இடுபொருட்கள் இல்லாமல் வேளாண் நிலங்கள் தரிசாகின. வயல்வெளிக்கு ராணுவத்தினரை அனுப்பியும் பார்த்தார்கள். துப்பாக்கி முனையில் தானியங்கள் விளைந்துவிடாதே! வேளாண் துறையின் அபத்தமான திட்டங்களால் விவசாயம் ஒரேயடியாகப் படுத்தது. உணவுப் பொருள் தட்டுப்பாடு மேலும் அதிகரித்தது.

வட கொரியாவின் ஆயுத தளவாட அணிவகுப்பு

கவனம் திரும்பும் வட கொரியா

வல்லரசுகளின் பனிப்போர் மத்தியில் ரஷ்யாவால் ஊட்டி வளர்க்கப்பட்ட வடகொரியா, இன்றுவரை அதே அமெரிக்க எதிர்ப்பிலேயே ஊறிக் கிடக்கிறது. அமெரிக்காவே அச்சம் கொள்ளும் எதிரி என்றால், அது வடகொரியாதான். அந்த அளவுக்கு வீரியமான அணு ஆயுதங்கள், அவற்றைச் சுமந்து கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகள் என ஏராளமான தளவாடங்கள் வடகொரியா வசம் இருக்கின்றன. அவற்றை, எந்த விநாடியிலும் அந்நாடு தங்கள் மீது ஏவக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்கா அஞ்சுகிறது. அவ்வப்போது அதிபர் கிம் உதிர்க்கும் அதிரடி வார்த்தைகள் அதற்கெல்லாம் வழிவகுத்துவிட்டன. தற்போதைக்கு வட கொரியா குறித்த கவலையை அமெரிக்கா கொஞ்ச காலத்துக்கு ஒத்திவைக்கலாம். அந்த அளவுக்கு, உள்நாட்டு சீர்கேடுகளில் சிக்கித் தவிக்கிறது வடகொரியா. அதற்கு முக்கியக் காரணம், உணவு உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் பெரும் சரிவு!

கவிழ்த்துப்போட்ட கரோனா

வடகொரியா தரித்த அணுகுண்டுகளைப் பார்த்து, உலக நாடுகள் வேண்டுமானாலும் தள்ளி நிற்கலாம். கரோனாவுக்கு அந்தக் கவலை இல்லாததில், சத்தமின்றி ஊடுருவி அந்நாட்டினரை அலங்கமலங்க அடித்தது. முதல் அலையின் தொடக்கத்திலேயே எல்லைகள் இழுத்து மூடப்பட்டாலும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அடிப்படை மருத்துவ வசதிகள் காணாத வடகொரியாவில், கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான ’முன்களப் பணியாளர்க’ளாக ராணுவத்தினரே இறக்கப்பட்டனர். இதையடுத்து, கரோனா தடுப்பு எனும் போர்வையில் சொந்த மக்களை ராணுவமே வேட்டையாடுகிறது என்று மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதை வடகொரியா மறுத்தது.

கரோனா இல்லாத தேசம் என சர்வதேசச் சமூகத்திடம் வடகொரியா மார்தட்டியது. ஆனால், கரோனா தொற்று உறுதியானவர்கள் திடீரென்று காணாமல்போனார்கள். இந்த அடாவடிகள் அதிபர் கிம் உடல்நிலைக் குறைவால் ஓய்வில் இருந்தபோது நாட்டில் உச்சம் தொட்டது. எல்லைகள் மூடல், இறக்குமதிக்குக் கடும் கட்டுப்பாடு, சர்வதேசச் சமூகத்தின் உதவிகளைப் புறக்கணித்தது என வடகொரியாவின் இந்தத் தொடர் சொதப்பல்களுக்கு மத்தியில், கரோனாவை மிஞ்சிய பூதமென பஞ்சம் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது.

வட கொரியாவின் குழந்தைகள்

மீண்டும் ஆர்ஜுயஸ் மார்ச் அபாயம்

6 மாதங்களுக்கு முன்னர் கூடிய கட்சியின் மத்தியக் குழுவில் உரையாற்றிய அதிபர் கிம், “நாட்டில் மீண்டும் ’ஆர்ஜூயஸ் மார்ச்’ (Arduous March) ஆபத்து வராமல் தடுப்போம்” என்று உருக்கமாகப் பேசியிருந்தார். அப்போதே அது சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னரும் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் மத்தியிலான சந்திப்புகளில் ’ஆர்ஜூயஸ் மார்ச்’ குறித்து கிம் தொடர்ந்து பேசிவருகிறார். நாட்டு மக்கள் நலன் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளாத அதிபரிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் ’ஆர்ஜூயஸ் மார்ச்’ கவலை, வட கொரியர்களை உலுக்கிப் போட்டிருக்கிறது.

ரஷ்யாவின் நேச அரவணைப்பிலும், அமெரிக்க எதிர்ப்பின் கணப்பிலும் தனது சர்வதேச இருப்பைக் கட்டமைத்த வடகொரியாவுக்கு, தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி இடியாக இறங்கியது. அதன் பிறகு இன்னொரு கம்யூனிச தேசமான சீனாவிடம் வடகொரியா திரும்ப வேண்டியதானது. இந்த இடைவெளியிலான வருடங்களில் வடகொரியா பெரும் பஞ்சத்துக்கு ஆளானது. வடகொரியாவின் கணக்குப்படியே சுமார் 30 லட்சம் மக்கள், தொண்ணூறுகளின் மத்தியில் நேரிட்ட பஞ்சத்தில் உயிரிழந்தார்கள். வரலாற்றில் ’ஆர்ஜுயஸ் மார்ச்’ என்று நினைவுகூரப்படும் இந்தக் கோரம், மீண்டும் நாட்டில் ஏற்படப்போவதாக அதிபரே கவலை தெரிவித்திருப்பது, நாட்டு மக்கள் மடியில் நெருப்பள்ளிப் போட்டிருக்கிறது.

தானிய உற்பத்தியைப் பார்வையிடும் கிம்-பழைய படம்

விண்ணைத்தொடும் விலைவாசி

கடந்த 5 வருடங்களாகவே வடகொரியாவின் பொருளாதாரம் சரிந்துகொண்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி 2017 முதற்கொண்டு ஐநா-வின் பொருளாதாரத் தடையும் வடகொரியாவுக்குப் பெரும் பாதிப்பைத் தந்தது. கரோனா அச்சத்தில் உள்ளிருந்தும் கதவடைத்துக்கொண்டதில், வடகொரியாவின் பொருளாதாரம் பெருத்த அடி வாங்கியது. போதாக்குறையாக சூறாவளி, வெள்ளம் என இயற்கைச் சீற்றங்களும் சேர்ந்துகொண்டதில், இயற்கைப் பேரிடர் மீது பழி போட்டு பொறுப்பைத் தட்டிக்கழிக்கவும் கிம் நிர்வாகம் முயன்றது. ஆனால், நடைமுறையில் அவை எதுவுமே கைகொடுக்கவில்லை. வடகொரியாவில் ஒரு சீப்பு வாழைப்பழம் இந்திய ரூபாய் மதிப்பில் மூவாயிரத்தைத் தொடுகிறது. நல்லதாய் ஒரு கப் காபி சாப்பிட ஆயிரத்து சொச்சம் ரூபாய் அவசியம். இவையெல்லாம் 4 மாதங்களுக்கு முந்தைய நிலவரம். இப்போது நிலவரம் இன்னும் மோசம்.

60-களின் மத்தியில் வடகொரியாவுக்குப் பயணித்த சே குவேரா, அந்நாட்டை முன்மாதிரி கம்யூனிச தேசமென்று புகழ்ந்து சென்றார். ஆனால், அடுத்து வந்த ஆண்டுகளில் வறட்டுத்தனமான அமெரிக்க எதிர்ப்பு, அதிபர்களின் சர்வதிகாரம், மக்கள் நலனில் அலட்சியம் என பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது வடகொரியா.

வட கொரிய அதிபர் கிம்

ஆயுதங்கள் பசி தீர்க்குமா?

எல்லாவற்றுக்கும் மேலாக, இயல்புநிலை திரும்ப இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என்பதால், 2025 வரை நாட்டு மக்களை குறைவாகச் சாப்பிடும்படி அறிவுறுத்தி இருக்கிறார் அதிபர் கிம். நாட்டின் மேம்பாட்டுக்காக போடப்படும் ஐந்தாண்டு திட்டங்கள் போல, உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ள விநோதமான இந்த நான்காண்டு திட்டத்தை வட கொரியாவில் அமல்படுத்துகிறார்கள். ஆனால், அது நடைமுறையில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகிறது. பஞ்சம் பற்றிய அச்சத்தில் கிடைத்த தானியத்தை எல்லாம் நாட்டு மக்கள் பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். பொதுமக்களின் பட்டினி பயம் அவர்களை நோக்கி நீளும் துப்பாக்கிகளைப் புறந்தள்ளிவிடும் என்பதால், வேறு வழியின்றி அதிபர் கிம் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார்.

ஆளுங்கட்சியின் விழா ஒன்றில், பொருளாதாரச் சரிவுக்கான நிர்வாகக் கோளாறுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். அதிபர் கிம்மின் அதிரடி வாழ்வில் இவையெல்லாம் இதற்கு முன்னர் கேள்விப்பட்டிராத மாற்றங்கள். தனது மிரட்டல்களை அமெரிக்காவோடு நிறுத்திக்கொண்டு, நாட்டு மக்களிடம் நயமாக அணுக ஆரம்பித்திருக்கிறார். பொது நிகழ்ச்சிகளில் எல்லாம் தலைகாட்டுவதுடன் உருக்கமாகப் பேசியும் வருகிறார். பசியில் காதடைக்கும் மக்களுக்கு அவை எந்த அளவு சென்று சேரும் என்பதில்தான், கிம் மற்றும் வடகொரியாவின் எதிர்காலம் இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE