இம்ரான் அறிவித்த மெகா நலத்திட்ட உதவிகள்: என்ன நினைக்கிறது பாகிஸ்தான்?

By ஆர்.என்.சர்மா

பெருந்தொற்று நோயாலும், விலைவாசி உயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் இம்ரான் கான் 12,000 கோடி பாகிஸ்தானிய ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை (நவ.3) அறிவித்தார். “நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை அறிவிக்கப்பட்டிராத நலத்திட்ட உதவி இது. இதனால் பாகிஸ்தான் நலவாழ்வு அரசாக மாறுகிறது” என்று பெருமிதத்துடன் அவர் குறிப்பிட்டார். அடுத்த 6 மாதங்களுக்கு, பாகிஸ்தானின் ஏழைக் குடும்பங்களுக்கு கோதுமை மாவு, நெய், பருப்பு வகைகளை அவற்றின் விலையில் 30 சதவீதம் குறைத்து விற்கப்போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.

அதே நேரத்தில், பெட்ரோல் விலை மேலும் உயர்த்தப்படும் என்றும், வரும் குளிர்காலத்தில் சமையல் எரிவாயு கிடைப்பதில் பிரச்சினை இருக்கும்; மக்கள் அதற்குத் தயாராக வேண்டும் என்றும் சூசகமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

வறுமைக் கோடு

“நாட்டில் வறுமைக் கோட்டுக்கும்கீழே வாழும் மக்கள் எத்தனைப் பேர் என்று கணக்கெடுக்க, அவர்களுடைய பொருளாதார நிலையைக் கேட்டு பதிவுசெய்யும் நடைமுறை உதவியிருக்கிறது. இப்படிப்பட்ட தரவுகள் இல்லாமல் மானிய உதவிகளை வழங்குவது எளிதான காரியமாக இருக்கவில்லை. பெரும்பாலும் குத்துமதிப்பான மதிப்பீடுகளை வைத்தே நிதி ஒதுக்கி வந்தோம். இப்போது துல்லியமாகக் கணக்கெடுப்பு நடந்திருப்பதால் இந்த நிவாரண உதவிகளை அறிவிக்க என்னால் முடிகிறது.

பாகிஸ்தான் தேஹ்ரிக்-இ-இன்சாஃப் அரசு மிகவும் மோசமான பொருளாதார நிலையில் ஆட்சிக்கு வந்தது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், சீனா போன்ற நாடுகளின் உதவியால் சர்வதேசக் கடன்களைத் தவணை தவறாமல் செலுத்த முடிந்திருக்கிறது. மேற்கொண்டு கடனுதவிபெற பன்னாட்டுச் செலாவணி நிதியத்தைத்தான் நாட வேண்டியிருந்தது. ஒரு வழியாக, பலரிடமும் உதவி பெற்று நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்திக்கொண்டிருந்தபோது, மிகப்பெரிய சோதனையாக கோவிட்-19 பெருந்தொற்று வந்துவிட்டது. அதை மிகச் சிறந்த முறையில் எதிர்கொண்ட சில நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்று சர்வதேச வட்டாரங்களில் நாம் பாராட்டப்படுகிறோம்.

பெருந்தொற்றுப் பரவாமலிருக்க, முழு அளவில் ஊரடங்கை அமல்படுத்தினால் வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிக்கும் என்பதால், சிறிய அளவிலும் புத்திசாலித்தனமாகவும் ஆங்காங்கே அமல்படுத்தினோம். கிராமங்களிலும் நகரங்களிலும் வேலைவாய்ப்புகளை அளிக்கும் விவசாயத் துறையையும், கட்டிட கட்டுமானத் துறையையும் பல்வேறு நடவடிக்கைகளால் காப்பாற்றினோம், ஏற்றுமதி பெருக உழைத்தோம். வேளாண்மை, கட்டுமானத் துறைகளுக்கு நாம் அளித்த ஊக்குவிப்புகளால் இரு துறைகளிலும் ஆக்கபூர்வமான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

விலைவாசி பிரச்சினை

விலைவாசி மிகப் பெரிய பிரச்சினை என்பதை அரசு ஒப்புக்கொள்கிறது. அதற்காக அரசை விமர்சிக்கும் உரிமை ஊடகங்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கிறது. அதே வேளையில், விலைவாசி உயர்வு பாகிஸ்தானில் மட்டும்தான் நிலவுகிறதா, பிற நாடுகளிலும் நிலவுகிறதா என்றும் பார்க்க வேண்டும். அதுமட்டுமல்ல, பாகிஸ்தானில் நிலவும் விலைவாசி உயர்வுகூட சர்வதேச அரங்கில் ஏற்படும் விலைவாசி உயர்வின் தொடர் விளைவே என்பதையும் அறிய வேண்டும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பாகிஸ்தானைவிட விலைவாசி உயர்வு அதிகம். இயற்கை நிலவாயுவின் விலை, அமெரிக்காவில் 116 சதவீதமும் ஐரோப்பாவில் 300 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. பாகிஸ்தானில் நாம் இன்னமும் விலையை உயர்த்தவில்லை.

"பெட்ரோல் விலை அதிகம் என்று கூறுகிறீர்கள். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானில்தான் பெட்ரோல் விலை மிக மிகக் குறைவு" என்கிறார் இம்ரான் கான்.

வெளிநாடுகளிலிருந்து வாங்கும் நிலவாயுவின் விலை மட்டுமே சமீபத்தில் உயர்த்தப்பட்டிருக்கிறது. வரும் குளிர்காலத்தில் நிலவாயு கிடைப்பதில் பிரச்சினைகள் இருக்கும் என்று தெரிகிறது. அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால், மக்கள் இதற்குத் தயாராகிக்கொள்ள வேண்டும்.

சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை கடந்த 3 முதல் 4 மாதங்களில் 100 சதவீதம் உயர்ந்திருக்கிறது, பாகிஸ்தானிலோ நாம் 33 சதவீதம் மட்டுமே உயர்த்தியிருக்கிறோம்.

பெட்ரோல் விலை அதிகம் என்று கூறுகிறீர்கள். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானில்தான் பெட்ரோல் விலை மிக மிகக் குறைவு. இனி பெட்ரோல் விலையை உயர்த்தியாக வேண்டும், இல்லாவிட்டால் அரசின் வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி (பற்றாக்குறை) வெகுவாக அதிகரித்துவிடும். இது இப்படியே தொடர்ந்தால், நாம் மேலும் கடன் சுமையில் ஆழ்ந்துவிடுவோம்.

கோதுமை விலை

இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் விற்கப்படுவதைவிட பாகிஸ்தானில் கோதுமை விலை பாதியாகத்தான் இருக்கிறது. பாகிஸ்தான் மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாதே என்று அரசு விலையை இப்படிப் பராமரிக்கிறது. விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக அரசு அளிக்கும் மானிய உதவிகள் 2 கோடி ஏழைக் குடும்பங்களுக்குப் பலன் அளிக்கும். ஏழைகள் கூட கோதுமை மாவு, நெய், பருப்பு வகைகளை எளிதாக வாங்க முடியும்.

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் வலுப்பட்டு, நிதிநிலை அனுமதித்தால் இந்த நலத்திட்ட உதவிகளை மேலும் விரிவாக்குவோம்.

தொழிலதிபர்களும் வேலை தரும் சேட்ஜிகளும் தங்களுடைய தொழிலாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஊதியங்களை உயர்த்தி அளிக்க வேண்டும், லாபங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கும் இம்ரான் கான், “பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்குத் தலைமை வகிக்கும் நவாஸ் ஷெரீஃப் குடும்பமும், பாகிஸ்தான் மக்கள் கட்சிக்குத் தலைமை வகிக்கும் பேநசீர் புட்டோ குடும்பமும் வெளிநாடுகளில் சேர்த்து வைத்துள்ள சொத்துகளை விற்று, பாதியளவாவது பாகிஸ்தானுக்குக் கொண்டுவந்தால் அனைத்துப் பண்டங்களின் விலையையும் குறைப்பேன் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்றும் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

“பொருளாதாரத்தைச் சிறப்பாகக் கையாளத் தெரியாமல் எதற்கெடுத்தாலும் முந்தைய அரசையே குறை கூறிக்கொண்டிருப்பது தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் உத்திதான்” என்கிறது ‘தி டான்’ தலையங்கம்.

அக்டோபர் மாதம்தான் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தினார் இம்ரான் கான். இதை அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. நாடு முழுக்க கண்டன ஊர்வலங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் பாகிஸ்தான் முஸ்லிம் லீகும் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் நடத்தின. அரசின் பெட்ரோல் விலை அதிகரிப்பால், இதுவரை இருந்திராத அளவுக்கு விலைவாசி உயர்வு ஏற்பட்டுவிட்டதாக அவை குற்றஞ்சாட்டின.

எதிர்வினைகள்

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் செய்தித் தொடர்பு செயலர் மரியம் ஔரங்கசீப், பிரதமர் இம்ரான் கான் அறிவித்த நிவாரண உதவிகள் வெறும் கண்துடைப்பு என்று கண்டித்திருக்கிறார். பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் விலகுவதே பாகிஸ்தான் மக்களுக்குப் பெரிய நிவாரணமாக இருக்கும் என்றும் அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அரசின் அறிவிப்பை சமூக ஊடகங்களில் பலர் வரவேற்றும், பலர் எதிர்த்தும், பலர் கேலி செய்தும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். “நல்ல நிவாரணம் – பிரதமரின் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும்” என்று ஒருவர் கேலி செய்திருக்கிறார்.

“நன்றி தேஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி, இனி எங்களால் 3 வேளை வயிறார சாப்பிட முடியும்” என்று இன்னொருவர் வரவேற்றுள்ளார்.

தலையில் கொட்டும் தலையங்கம்

“விலைவாசி வேகமாக உயர்ந்துவரும் இந்நாட்களில் அரசு அறிவித்துள்ள சிறிய அளவிலான ரொக்க மானியம், மக்களுடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாக இல்லை. அரசு அறிவித்துள்ள 12,000 கோடி ரூபாய் நிவாரணம் மாதத்துக்கு ஒரு நபருக்கு தலைக்கு 154 ரூபாய்தான் வருகிறது. இது எப்படி இத்தனை மக்களுக்கும் போதும்? பெட்ரோல் விலையை உயர்த்திய அரசு அடுத்து நிலவாயு விலையை ஏற்றப் போவதாக கோடிட்டுக் காட்டியிருக்கிறது. அடுத்தபடியாக மின்சாரக் கட்டணத்தையும் நிச்சயம் உயர்த்தும். மக்கள் இவற்றால் மேலும் ஏழைகளாக மாறுவார்கள். கிராமப்புறம், நகர்ப்புறம் என்றில்லாமல் அனைத்து நடுத்தரக் குடும்பங்களும் விலைவாசி உயர்வால் திண்டாடுவார்கள். மக்களுடைய வருமானத்தில் 50 சதவீதம் சாப்பாட்டுச் செலவுக்கே போகும்போது எரிபொருள் செலவும் போக்குவரத்துச் செலவும் கையை மீறும். இதனால் மக்கள் சத்தான உணவையும் காய்கறி – பழங்களையும் வாங்கி உண்ண முடியாமல் ஊட்டச்சத்துக் குறைவால் நோயெதிர்ப்பு சக்தியை இழப்பார்கள். அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மக்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யப் போதவே போதாது.

பொருளாதாரத்தைச் சிறப்பாகக் கையாளத் தெரியாமல், எதற்கெடுத்தாலும் முந்தைய அரசையே குறை கூறிக்கொண்டிருப்பது தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் உத்திதான். பாகிஸ்தானில் நிலவும் விலைவாசியைப் பிற நாடுகளுடன் ஒப்பிடுவது எந்த வகையிலும் சரியில்லை. இந்தியா, வங்கதேசத்தைவிட பாகிஸ்தானில் விலை குறைவாக இருக்கலாம், அங்குள்ள மக்களுடைய வாங்கும் சக்தியுடன் அதை ஒப்பிட வேண்டும். அவ்விரு நாடுகளிலும் நபர்வாரி வருவாய் அதிகம் என்பதைக் கவனிக்க வேண்டும். மக்களுக்கு அரசுகள் அளிக்கும் உதவிகள் அநேகம் என்பதை உணர வேண்டும்.

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை நிர்ணய உத்தி, தனியார் கார் உரிமையாளர்களுக்கு லாபகரமாகவும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறவர்களுக்கு சுமையாகவும் இருக்கிறது. உயர் வேக டீசல் விலையே இதற்கு சாட்சி. ஏழைகள் வாங்கக்கூடிய விலையில் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் ரேஷன் கடைகளில் இந்தியாவில் விற்கப்படுகிறது. விலைவாசியைக் குறைக்க அமைப்பு ரீதியிலான பொருளாதார நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும், அவ்வப்போது செய்யும் ஒட்டு வேலைகள் நிரந்தரத் தீர்வாகாது” என்று பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் ‘தி டான்’ நாளிதழ், தனது தலையங்கத்தில் அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் நில எல்லையால் பிரிந்திருக்கலாம், மொழி – மதம் கூட வேறுபடலாம், அரசியலும் நிர்வாகக் கலாச்சாரமும் ஒன்றுதான் என்பதே இவற்றிலிருந்து புரிகிறது. ஹூம்! என்ன செய்ய... பாகிஸ்தானைப் பிரிக்காமல் இருந்திருந்தால், ராணுவத்துக்காகும் செலவைக் குறைத்து இரு பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் முன்னேற்றியிருக்கலாம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE