பகடிக்கும் ஆளான பருவநிலை மாநாடு

By எஸ்.சுமன்

பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் கூடிய பருவநிலை மாநாடு, அதன் விமர்சகர்களால் பகடிக்கும் ஆளாகி உள்ளது. புவி வெப்பமாதலை கட்டுப்படுத்துதல், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல் போன்றவை இந்த மாநாட்டின் விவாதப் பொருண்மைகளில் முக்கியமானது. ஆனால் மாநாட்டை ஒட்டி நடந்த பலவும் அதன் நோக்கத்தை கேள்விக்கு ஆளாக்குவதாகு, இந்த விமர்சகர்கள் இணையவெளியில் பொங்கியிருக்கிறார்கள்.

கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் கூடிய உலகத் தலைவர்கள்

பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் என 30 ஆயிரம் பேர் கிளாஸ்கோவிற்கு கிளம்பினார்கள். இவர்களுக்காக 400க்கும் மேற்பட்ட ஜெட் விமானங்கள் ஸ்காட்லாந்து நோக்கி பறந்திருக்கின்றன. இந்த விமானங்கள் வெளியிட்ட கரியமில வாயுவின் அளவு மட்டுமே தோராயமாக 13,000 டன்கள் என்று சூழியல் ஆர்வலர்கள் கணக்கிட்டுள்ளார்கள்.

பெட்ரோலிய பொருட்களின் உபயோகத்தை குறைக்க முன்வர வேண்டும் என்பது பருவநிலை மாநாட்டின் பிரதான நோக்கங்களில் ஒன்று. கிளாஸ்கோ மாநாட்டுக்கு சற்று முன்னதாக ரோமில் விரைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பவனியில், பங்கேற்ற கார்களின் எண்ணிக்கை மட்டுமே 85 என்கிறது இன்னொரு செய்தி. இந்த வகையில், இதர தலைவர்களுக்கான வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால் தலை சுற்றும். கரோனா அலை வீரியம் குறையாதிருந்தால் இந்த கூட்டம், வேறு வழியின்றி மெய்நிகரில் கூடியிருக்கும். அந்த வகையில் இப்போதும் தலைவர்களின் சந்திப்பு நிகழ்ந்திருப்பின், கரியமில வாயு வெளியேற்றத்தின் அளவை கணிசமாகவேனும் குறைத்திருக்கலாமே என்கின்றனர் இந்த விமர்சகர்கள்.

முதல் பருவநிலை உச்சி மாநாடு பெர்லினில்(1995) தொடங்கியபோதும், அதற்கான வித்து ரியோவில்(1992) கூடிய மாநாட்டில் ஊன்றப்பட்டது. அதில் தொடங்கி கிளாஸ்கோ வரை கடந்த 30 வருடங்களில் கூடிய பருவநிலை மாநாடுகள், அவற்றின் வெற்று முழக்கங்கள், வளர்ந்த நாடுகளின் வாய்பந்தல்கள், நடைமுறைக்கு எட்டாத தொலைநோக்குத் திட்டங்கள் என பலவும் இந்த விமர்சகர்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகின்றன.

பருவநிலை மாற்றம் மீதான உரைகள், புள்ளிவிபரங்கள், விசாரணைகள் எல்லாமே சற்று அலுப்பூட்டக்கூடியவை. இதன் விளைவாக கிளாஸ்கோ கூட்டத்தில் பங்கேற்ற உலகத் தலைவர்களில் பலரும், பள்ளிக்கூடத்தில் பாடம் ’போர்’ அடிக்கும்போது தூங்கி வழியும் பிள்ளைகளைப் போல குட்டி நிஷ்டைகளில் ஆழ்ந்திருந்தார்கள். அந்த புகைப்படங்களை வெளியிட்டும் சமூக ஊடகங்களில் பருவநிலை மாநாடு பகடி செய்யப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE