ஆப்கன் நிதியைக் கோரி மேற்குலக வங்கிகளிடம் தாலிபான்கள் சரண்

By எஸ்.எஸ்.லெனின்

ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான நிதியாதாரங்களை விடுவிக்குமாறு, உலகின் பல்வேறு நாடுகளின் வங்கிகளிடம் தாலிபான்கள் கோரி வருகிறார்கள். அதற்காக, மேற்குலகின் நிபந்தனைகளான பெண் கல்வி, மனித உரிமைகளை ஆப்கனில் தழைக்க விடுவதாகவும் உறுதி அளிக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்திருக்கிறது. புதிய ஆட்சி அமைத்ததன் கொண்டாட்டங்கள் எல்லாம் வடிந்த பிறகு, நிதர்சன நெருக்கடிகளால் தாலிபான்கள் திக்குமுக்காடி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானின் கஜனா துடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் வங்கிகள் பலவும் திவாலாகும் சூழலில் தவிக்கின்றன. உணவுப்பொருள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. அரசு இயந்திரம் உருள்வதற்கான நிதியாதாரத்தை சேகரிக்க வழியின்றி தாலிபான் ஆட்சியாளர்கள் விழி பிதுங்கிக் கிடக்கிறார்கள்.

ஆப்கன் வங்கிகளில் ஒன்று

வேறு வழியின்றி, அயல்தேசங்களின் மத்திய வங்கிகளில் குவிந்திருக்கும் ஆப்கானின் நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறர்கள். புதிய ஆப்கன் அரசை அங்கீகரிக்காத அந்த தேசங்கள், தங்கள் வங்கிகளின் ஆப்கன் நிதியை முடக்கி வைத்திருக்கின்றன. மேலும் அவற்றை விடுவிப்பது, தாலிபான்களின் சகோதர அடிப்படைவாத குழுக்களின் வளர்ச்சிக்கு சேர வாய்ப்பாகலாம் என்பதும் அந்த நாடுகளின் அச்சமாக இருக்கிறது.

வங்கி தேசங்களின் அழுத்த அமைதி தொடரவே, ’மேற்கு நாடுகளின் வலியுறுத்தலுக்கு ஏற்ப மகளிர் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறோம். அதற்குமான செலவினங்களுக்கு தவணை முறையிலாவது ஆப்கன் நிதியை விடுவியுங்கள்’ என்று இறங்கி வந்திருக்கிறார்கள். ’உலக நாடுகள் மெச்சும் வகையில், மனித உரிமையை மதிப்பதிலும் இனி புதிய ஆப்கானிஸ்தானைப் பார்க்கப் போகிறீர்கள். எங்கள் சட்டத்துக்கு உடன்படாத, தன்பாலீர்ப்பு அங்கீகாரம் தவிர்த்து இதர மனித உரிமைகளை கடைபிடிக்கத் தயாராக இருக்கிறோம்’ என தாலிபான்கள் கெஞ்ச ஆரம்பித்திருக்கிறார்கள்.

தாலிபான்கள்

ஆனால் ஆப்கன் நிதியை விடுவிப்பது தவிர்த்து, ஐரோப்பிய நாடுகளுக்கும் வேறு வழியில்லை. படையெடுத்து வரும் ஆப்கன் அகதிகளின் எண்ணிக்கையை குறைக்கவும், ஏற்கெனவே குடியேறி இருப்பவர்களை திருப்பி அனுப்பவும் இந்த நாடுகள் உத்தேசித்து வருகின்றன. ஆனால், பல பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதிகளை தாலிபான்கள் பொறுப்பாக கையாள்வார்களா அல்லது நாச சக்திகளுக்கு அந்த நிதி மடைமாறுமா என்ற ஐயம் மட்டும் அவர்களை விட்டபாடில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE