வலதுசாரிகளிடம் சாயும் ட்விட்டர்

By எஸ்.எஸ்.லெனின்

சமூக ஊடகங்களில் அந்த நேரத்தின் ட்ரெண்டிங், பயனரின் பார்வைக்கு தட்டுப்படும் பதிவுகள் என்பதையெல்லாம் அந்த சமூக ஊடகங்களின் அடிப்படையான அல்காரிதமே அதிகம் தீர்மானிக்கிறது. அந்த வகையில். பிரபல சமூக ஊடகமான ட்விட்டரின் அல்காரிதம் வலதுசாரிகளுக்கு ஆதரவாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல்-ஆகஸ்ட் இடையே, 7 நாடுகளைச் சேர்ந்த ட்விட்டரில் தீவிரமாக களமாடும் 5 சதவீத இணையவாசிகளை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சமகாலத்தில் சமூக ஊடகங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட மிகப்பெரும் ஆய்வு என்று இதை ட்விட்டர் நிறுவனம் குறிப்பிடுகிறது.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆய்வின் முடிவில் ஜெர்மனி தவிர்த்த இதர நாடுகளில் வலதுசாரி அரசியல்வாதிகளுக்கு ஆதரவாகவும், அவர்களது பதிவுகள், செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்தும் ட்விட்டர் அல்காரிதம் செயல்படுவதாக தெரிய வந்தது.

சமூக வெளியில் எது அதிகம் பகிரப்படுகிறது, அதன் போக்கு என்னவாக அமையும், அதில் இடையீடு செய்யும் பயனர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கொண்டே அப்போதைய ட்ரெண்டிங் என்பதை ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் தீர்மானிக்கின்றன. ட்விட்டர் காட்டும் வழியில் பயனர்களும் சேர்ந்துகொள்ள, ட்ரெண்டிங் என்பதன் போக்கு மேலும் வலுவடைகிறது. இந்த வகையில் வலதுசாரிகளின் உள்ளடக்கங்கள், அவர்கள் குறித்த செய்திகளையே ட்விட்டர் அல்காரிதம் பயனரின் பார்வைக்கு அதிகம் பரிமாறுகிறது. இதன் முடிவாக டிரெண்டிங், வைரல் என சமூக ஊடகத்தின் திருப்பங்களும், திசை வீச்சும் தீர்மானிக்கப்படுகின்றன.

ஆய்வின் மற்றுமொரு முடிவாக நடுநிலை ஊடகங்களின் செய்திகளைவிட ஒருபக்கச் சார்புடைய ஊடகங்களின் செய்திகளை, பயனர்களுக்கு அதிகம் சென்று சேரும்படி ட்விட்டர் அல்காரிதம் செயல்படுவதும் தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் சமூக ஊடகங்களின் மோசடிகளை உரசிச் சொல்லும் விசிலூதி ஒருவர், ஃபேஸ்புக் எவ்வாறு பொய்ச் செய்திகளையும், வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளையும் பரப்புவதில் பங்காற்றுகிறது என்பதை அம்பலப்படுத்தி இருந்தார். அதையடுத்து பயனர் மத்தியில் தங்களது வெளிப்படைத் தன்மையையும், சமூகப் பொறுப்பையும் பறைசாற்றிக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், ட்விட்டர் நிறுவனம் தாமாக முன்வந்து இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE