தண்ணீரின்றி தவிக்கும் தேசம்

By ஆர்.என்.சர்மா

இந்த நூற்றாண்டில் பெட்ரோலியப் பண்டங்களின் பற்றாக்குறை, விலையுயர்வு போன்ற பிரச்சினைகளைவிடவும் தண்ணீர் பற்றாக்குறைதான் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தப்போகிறது. இதனால் நாடுகளுக்கு இடையேயும், நாடுகளுக்கு உள்ளேயும்கூட போர் மூளக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன. சிரியாவில், குறிப்பாக அதன் வட கிழக்குப் பகுதிகளில் கடுமையான தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் என்றால் குடிநீர் மட்டும் அல்ல; துணி துவைக்க, பாத்திரம் கழுவ, வீடு மெழுக என்று இதர தேவைகளுக்குக்கூட அங்கு தண்ணீரில்லை.

நெருங்கிவரும் அபாயம்

சிரியா மக்களுக்கு உதவும் சர்வதேச உதவி அமைப்புகள் இது குறித்துப் பல அறிக்கைகளை, உரியவர்களுக்கு அனுப்பிக்கொண்டே இருக்கின்றன. இராக்கிலும் வட கிழக்கு சிரியாவிலும் வசிக்கும் மக்கள், குடிநீர் கிடைக்காமலும் அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதால் ஏற்படும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களாலும் ஆயிரக்கணக்கில் மடியும் அபாயம் நெருங்கி வருகிறது என்று செவ்வாய்க்கிழமை (அக்.19) அனுப்பிய அறிக்கைகள் எச்சரிக்கின்றன. மழை இல்லாததால் இப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. ஆறுகளில் ஓடும் தண்ணீர் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதால், அவற்றை இறைக்க முடியவில்லை. உள்நாட்டுப் போரால் குடிநீரேற்று நிலையங்கள், நீரைச் சுத்திகரிக்கும் அமைப்புகள், நீரைக் கொண்டு செல்வதற்கான குழாய்ப் பாதை விநியோக அமைப்பு ஆகியவை முற்றாகச் சேதம் அடைந்துவிட்டன.

ஏப்ரல் 2021 முதல் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கடுமையான வயிற்றுப் போக்கு, உடலில் நீர்ச்சத்துக் குறைதல் போன்றவற்றால் நலிவுற்றுள்ளனர். பதினேழாயிரத்துக்கும் மேற்பட்டோர் மணல்வண்டுக் கடியால் தோல் பாதிக்கப்பட்டும் உள்ளுறுப்புகள் சேதம் அடைந்தும் அவதிப்படுகின்றனர். கடுமையான கோடைக் காலத்தில்தான் இந்த நோய்கள் ஏற்படும். ஆனால், இப்போதோ நல்ல தண்ணீர் கிடைக்காததால் இந்த நோய்கள் வாட்டுகின்றன. ‘சேவ் சில்ட்ரன்’ என்ற சர்வதேச அமைப்பும் ‘மெர்சி கார்ப்ஸ் ஆஃப் சிரியா’ என்ற அமைப்பும் இதைத் தெரிவிக்கின்றன. சிரிய மக்கள் அனுபவித்துவரும் பல்வேறு துயரங்கள் போதாது என்று, இந்தத் தண்ணீர் பற்றாக்குறையும் சேர்த்து வாட்டுகிறது என்று மெர்சி கார்ப்ஸ் அமைப்பினர் வருத்தத்துடன் பதிவுசெய்திருக்கின்றனர்.

யூப்ரடிஸ் நதியில் சொற்ப அளவே தண்ணீர் ஓடுவதால், பம்புசெட்டுகள் மூலம் இறைத்து மேலே ஏற்ற முடியாமல் பல நீரேற்று நிலையங்கள் செயலிழந்துவிட்டன. உள்நாட்டுப் போர் காரணமாக, நீர்வழங்கும் நிலையங்களை முறையாகப் பராமரிப்பதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. இதனாலும் பற்றாக்குறை நிலவுகிறது.

துருக்கி மீது புகார்

துருக்கி ஆதரவுப் படைகள், ஆலோக் நீர் வழங்கு நிலையத்தைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் 2019-ல் கொண்டு வந்தன. அதிலிருந்து குடிமக்களுக்கான தண்ணீரை வழங்காமல், ராணுவத் தேவைக்கு அதிகம் எடுத்துக்கொள்கின்றனர். இதைக் கவனித்த மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, மக்களுக்கான குடிநீரை இப்படிக் குறைக்கலாமா என்று கேட்டதற்கு, “மழையும் இல்லை, ஆற்றிலும் தண்ணீர் ஓடவில்லை எங்களைக் குற்றம்சாட்டி என்ன பயன்?” என்று திருப்பிக் கேட்கின்றனர் துருக்கி ராணுவ அதிகாரிகள். அது மட்டுமின்றி மின்சாரப் பற்றாக்குறையாலும் நீரேற்றும் பம்புகளில் ஏற்பட்ட பழுதாலும் தண்ணீரை வழங்க முடியவில்லை என்றும் காரணம் கூறுகின்றனர்.

கோவிட் -19 பெருந்தொற்றால் காய்ச்சலுக்கு உள்ளானவர்களுக்கும், ஊரடங்கால் வீடுகளிலும் முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் குடிநீர் தேவைப்படுகிறது. துருக்கி ராணுவத்தின் செயலால் நல்ல தண்ணீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு உதவி அமைப்புகள் திணறுகின்றன. 2021 பிறந்து மொத்தம் 89 நாட்களுக்கு ஆலோக் நீரேற்று நிலையத்திலிருந்து சொட்டுத் தண்ணீர்கூட விடப்படவில்லை. 142 நாட்களுக்கு, வழக்கமான அளவில் பாதிக்கும் குறைவாகத்தான் தண்ணீர் வழங்கப்பட்டது.

யூப்ரடிஸ் நதியில் சொற்ப அளவே தண்ணீர் ஓடுவதால் பம்புசெட்டுகள் மூலம் இறைத்து மேலே ஏற்ற முடியாமல் பல நீரேற்று நிலையங்கள் செயலிழந்துவிட்டன. உள்நாட்டுப் போர் காரணமாக, நீர்வழங்கும் நிலையங்களை முறையாகப் பராமரிப்பதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. இதனாலும் பற்றாக்குறை நிலவுகிறது. இப்பகுதியில் மொத்தம் 91 நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 24 நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. இந்தத் தண்ணீரை நம்பித்தான் இங்கே 90 சமூகங்கள் கூட்டமாக வாழ்கின்றன. அதுபோக, போரினால் வீடிழந்தவர்களுக்கு 50 முகாம்கள் திறக்கப்பட்டு அங்கும் ஆயிரக்கணக்கானவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கைகழுவக்கூட தண்ணீர் இல்லை

தண்ணீர் இல்லாததால் விவசாயமும் நடக்கவில்லை. பல ஏழைக் குடும்பங்கள் தங்களுடைய குடும்பத் தேவைக்கான கோதுமையையாவது சாகுபடி செய்துகொண்டிருந்தன. இப்போது அவர்களும் உதவி தேவைப்படுவோர் வரிசைக்கு வந்துவிட்டனர். அதுமட்டுமின்றி கோவிட் 19 பரவலும் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் வந்தவர்களை சோதித்துப் பார்க்கக்கூட போதிய மருத்துவ சாதனங்கள் இல்லை. அத்துடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டால், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளிக்கவும் இங்கே ஆக்சிஜன் சேமிப்புக் கலங்களும் இல்லை. கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவுங்கள் என்று சொல்லி சோப்பைக் கொடுக்க முடிகிறது, தண்ணீருக்கு எங்கே போவது என்று உதவி அமைப்புகள் பரிதவிக்கின்றன.

கையில் பணம் இருப்பதைக் கொண்டு தனியாரிடம் சிறிது காலம் தண்ணீர் வாங்கினார்கள் மக்கள். போர் காரணமாகவும் பொருளாதாரச் சூழல் காரணமாகவும் சிரியாவின் நாணயத்தின் மதிப்பு சர்வதேசச் சந்தையில் வெகுவாக சரிந்துவிட்டது. இதனால், அதிகப் பணம் கொடுத்தால்தான் தண்ணீர் வாங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. சிலர் தங்களுடைய மாத ஊதியத்தில் 40 சதவீதம் வரை குடிநீருக்கே செலவிட்டும் பார்த்தனர். ஒரு கட்டத்தில் முடியாமல், கிடைப்பதைக் குடிப்பது என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

உதவிக்கு காத்திருக்கும் மக்கள்

சர்வதேச சமூகம் நிதியுதவி அளித்தால்தான் சிரிய மக்களைக் காப்பாற்ற முடியும் என்கின்றன உதவி அமைப்புகள். 2011-ல் சிரியாவில் உள்நாட்டுச் சண்டை தொடங்கியது முதல், இதுவரையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். இப்போதுகூட யாரும் சமரசத்துக்கு வரத் தயாராக இல்லை.

முதலில் உள்நாட்டு மக்கள் மட்டுமே கலந்துகொண்ட போரில் இப்போது வெளிநாட்டுக் கூலிப்படையினர், ராணுவம், உள்ளூர் தீவிரவாதிகள் என்று பல தரப்பினரும் இறங்கியுள்ளனர். ஒரு கோடியே முப்பது லட்சம் சிரிய மக்களுக்கு இப்போது உணவு, குடிநீர், உடைகள், மருந்து – மாத்திரைகள் தேவைப்படுகின்றன. அவர்களில் 90 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கும்கீழே வாழ்கிறவர்கள். முதலில் சிரியர்கள் உணர்ந்து போரை நிறுத்தினால்தான், வெளிநாட்டு உதவிகளைப் பெற முடியும். பூனைக்கு யார் மணி கட்டுவது?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE