மெக்கா புனித தலத்தில் சமூக இடைவெளிக்கு விடை!

By எஸ்.எஸ்.லெனின்

பெருந்தொற்று பாதிப்புகள் குறைந்ததை அடுத்து மெக்கா புனித தலத்தில், சமூக இடைவெளிக்கான கட்டுப்பாடுகள் பெருமளவு நீக்கப்பட்டுள்ளன. இதனால் உலகம் முழுக்க ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெருந்தொற்று வீரியமாக இருந்தபோது..

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியரின் பிரதான புனித தலங்களான மெக்கா மற்றும் மெதீனாவில், பெருந்தொற்று பரவலை அடுத்து சமூக இடைவெளிக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருந்தன. மேலும் ரமலான் புனித நாளன்று உள்ளூரார் மட்டுமே அங்கு கூடி தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர். பெருந்தொற்று வீரியமாக இருந்த நாடுகளின் யாத்ரீகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், கரோனா அறிகுறிகள் தென்படக் கூடாது, ஒரு நேரத்தில் 50 பேர் மட்டுமே தொழுகைக்கு அனுமதி என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்தன.

மெக்கா

அண்மையில் பெருந்தொற்று வீதம் திருப்தியளிக்கும் வகையில் குறைந்து வருவதை அடுத்து நாடு முழுக்க அக்டோபர் 17 முதல் முழு தளர்வுகளை அமல்படுத்த உத்தரவானது. போக்குவரத்து, உணவகங்கள், திரையரங்குகள் வழக்கம் போல செயல்பட அனுமதிக்கப்பட்டன. திறந்தவெளிகளில் முகக்கவசம் அறிய விலக்கும், உள்ளரங்கு நிகழ்வுகளில் முகக்கவசத்துக்கு கட்டாயமும் தொடர்கிறது. முக்கியமாக தேசத்தின் இரு புனித தலங்களான மெக்கா மற்றும் மெதினாவில் பெருந்தொற்று கட்டுப்பாடுகள் பெருமளவு விலக்கிக்கொள்ளப்படுகின்றன.

அதன்படி ஞாயிறன்று மெக்கா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் கரோனா தடுப்பூசி, முகக்கவசம் அணிதல் தவிர்த்து இதர கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. காபா மையத்தை சுற்றி தரையில் வரையப்பட்டிருந்த சமூக இடைவெளிக்கான அடையாளங்கள் அழிக்கப்பட்டன. தொழுகை செய்வோர் கரோனாவுக்கு முந்தைய தினங்களைப் போல தோள்தொட்டு குழும அனுமதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE