அதிகரிக்கும் வேலைவாய்ப்பும் ஆள் பற்றாக்குறையும்: பிரிட்டனில் ஒரு விநோதச் சிக்கல்!

By ஆர்.என்.சர்மா

கரோனா பெருந்தொற்று ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான பிரச்சினையை ஏற்படுத்திவருகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், பொதுமுடக்கத்தின் தாக்கத்தால் ஏராளமானோர் வேலையிழந்தனர். பலர் பாதி சம்பளத்துடன் பல்லைக்கடித்துக்கொண்டு வேலை பார்த்துவருகிறார்கள். ஆனால், பிரிட்டனிலோ வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் நிறுவனங்கள் தடுமாறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் 1930-களில் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியானது, மனிதர்களின் ஊக மனோபாவத்தால் ஏற்பட்டது. அதனால் அது உலகை பொருளாதார, வர்த்தக ரீதியாக பாதித்தாலும் கோவிட் 19 போல வாழ்க்கையை முற்றாக முடக்கிப் போடவில்லை. இப்போது தடுப்பு ஊசிகள், நோயெதிர்ப்பு மருந்துகள், தனிப் பிரிவு சிகிச்சை மையங்கள் எல்லாம் ஏற்பட்டுவிட்டன. இப்போதும் நோய் பரவுகிறது, வைரஸ் உருமாற்றம் அடைகிறது, இறப்போர் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் இல்லாவிட்டாலும், தொடர்ந்து கவலைப்படும் வகையிலேயே இருக்கிறது.

இந்த நிலையில்தான் பிரிட்டனில் 10 நாட்களுக்கு முன்னால் பெட்ரோல், டீசலுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பெட்ரோல் டேங்கர்களை ஓட்ட தனிப்பயிற்சி பெற்ற ஓட்டுநர்களில் பெரும்பகுதியினர் மூப்பு காரணமாக ஓய்வு பெற்றதாலும் கணிசமானவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வேலைக்கு வராமல் நின்றுவிட்டதாலும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பிரிட்டனில் குறிப்பாக லண்டனில் வாகனங்கள் பெட்ரோல், கேஸ் வாங்க போட்டிபோட்டு அலைந்தன. அப்போதே, வீடுகளுக்கு தயார் உணவு, சமைத்த உணவு எடுத்துச் செல்லும் பணியாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. இப்போது அந்தத் துறையில் மட்டுமல்ல கட்டுமானம், விருந்தோம்பல் துறை, தனி வாகனங்கள் ஓட்டும் துறை என்று வேறு பல துறைகளிலும் பற்றாக்குறை அதிகமாகி வருகிறது.

2001-க்குப் பிறகு இப்போதுதான் பிரிட்டனில் அதிக வேலையிடங்கள் காலியாக இருக்கின்றன. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையில் 11 லட்சம் வேலையிடங்கள் காலி. தேசிய தரவுகளுக்கான அலுவலகம் இதைத் தெரிவிக்கிறது.

முதல் காரணம், ஏற்கெனவே வேலை செய்துவந்த ஊழியர்கள், தொழிலாளர்களில் கணிசமானவர்கள் மூப்பு காரணமாக பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டனர். பணி நீட்டிப்பு தந்தாலும் அவர்கள் வேலைக்கு வர விரும்பவில்லை. பணி நேரமும் பொறுப்புகளும் அதிகம். இதனால் மன உளைச்சல் அதிகரித்தது. அதைவிட முக்கியம் அவர்களுடைய வேலைக்கேற்றபடி ஊதியம் உயர்த்தப்படவில்லை. விலைவாசி உயர்வுக்கேற்ப ஊதியம் இல்லாததால் வெளிநாடுகளிலிருந்து வேலைக்கு வர பெரும்பாலோர் தயங்கினர். இப்போது பெருந்தொற்றுக்காலம் என்பதால் குடியிருக்க வாடகை, போக்குவரத்துக் கட்டணம், உணவுக் கட்டணம் என்று எல்லாமே உச்சாணிக் கொம்பில் ஏறிவிட்டன. ஏற்கெனவே நடுத்தர வயதிலிருந்து வேலை செய்வோருக்கு வாழ்க்கைச் செலவுகளை எதிர்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் புதிதாக வேலைக்கு வருவோர் குடும்ப ஆதரவு இல்லாமல் தன்னந்தனியராக வேலை செய்ய முடியாது என்பதால், வேலை காலியிருந்தும் நிரப்ப முடியவில்லை.

2001-க்குப் பிறகு, இப்போதுதான் பிரிட்டனில் அதிக வேலையிடங்கள் காலியாக இருக்கின்றன. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையில் 11 லட்சம் வேலையிடங்கள் காலி. தேசிய தரவுகளுக்கான அலுவலகம் இதைத் தெரிவிக்கிறது. சில்லறை வணிகத் துறையிலும் மோட்டார் வாகன பழுதுபார்ப்புத் துறையிலும் இந்த பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. அதேவேளையில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருந்தொற்றுக் காலத்தைவிட அதிகமாக இருக்கிறது.

இதெல்லாம் பலருக்குப் புதிர் போல இருக்கும். வேலை காலியாக இருக்கிறது என்கிறீர்கள், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது என்கிறீர்களே என்று கேட்கத் தோன்றும். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை படித்த படிப்புக்கு அல்லது பெற்ற பயிற்சிக்கு ஏற்ற நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையை ஆதாயம் தரும் வேலை என்பார்கள். அப்படித் தொடர்பே இல்லாமல், ஏதோ வேலை செய்கிறார்கள் என்பதற்காகக் குறைந்தபட்ச ஊதியம் தருவதைக் குறை வேலைவாய்ப்பு (under employment) என்பார்கள். எம்.காம்., படித்த முதுகலைப் பட்டதாரி ஜவுளிக்கடையில் உதவியாளாக இருப்பதைப் போன்ற வேலைவாய்ப்பு அது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியதாலும், பெருந்தொற்றுக்கால முழு ஊரடங்கு விதிகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டதாலும் பிற நாடுகளிலிருந்து தொழிலாளர்களால், பணியாளர்களால் பிரிட்டன் வந்து வேலை தேட முடியவில்லை.

நிறுவனங்களின் ஊதியப் பட்டியலில் இடம் பெறுவோர் எண்ணிக்கை மாதா மாதம் அதிகரிக்கிறது. அப்படி 2,07,000 வேலைவாய்ப்புகள் ஜூலையிலிருந்து அதிகரித்து செப்டம்பரில் 292 லட்சமாகிவிட்டது. அக்டோபர் இறுதியில் வேலை செய்வோரின் எண்ணிக்கை, பெருந்தொற்று வருவதற்கு முன்னால் இருந்ததைவிட அதிகரித்துவிடும் என்று தெரிகிறது. காலியாக இருக்கும் வேலையிடங்களின் எண்ணிக்கையும் 12 லட்சமாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அரசின் பொருளாதார உத்திதான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார் பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

கோவிட் 19 காரணமாக ஊதியம் இல்லாமல் விடுப்பிலேயே இருக்க நேர்ந்தவர்கள் பலரும் இப்போது வேலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். நியாயமாக இந்தப் புள்ளிவிவரங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். ஆனால் தரவில்லை. காரணம் சரியான ஆளுக்கு சரியான வேலை அல்லது சரியான வேலைக்கு சரியான ஆள் என்ற நிலை இருக்குமானால் அது உற்பத்தியை மட்டுமல்ல, உற்பத்தித் திறனையும் உயர்த்தும். வேலையில்லாதவர்களுக்கு காலியிடங்களில் வேலை தருவதாகத்தான் பல வாய்ப்புகள் இருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியதாலும், பெருந்தொற்றுக்கால முழு ஊரடங்கு விதிகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டதாலும் பிற நாடுகளிலிருந்து தொழிலாளர்களால், பணியாளர்களால் பிரிட்டன் வந்து வேலை தேட முடியவில்லை. இது மேலும் சில காலத்துக்குத் தொடரும். நல்ல தொழில் கல்வியும் பயிற்சியும் உள்ளவர்கள் கிடைக்காமல் தொழில், வர்த்தக நிறுவன அதிபர்கள் கவலைப்படுகிறார்கள். அதைவிட முக்கியம் பிரிட்டனின் சொந்த மக்கள் தொகையில் கணிசமானவர்கள் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களால் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வேலைக்கு வர முடியாது. எனவே ஊதியத்தை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை சில துறைகளில் உயர்த்தியிருக்கிறார்கள்.

வேலைக்கு வருவது மட்டுமல்ல, தொடர்ந்து விசுவாசமாக நீடித்தால் ஊக்க ஊதியம் என்றும் பிரிட்டன் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. ஊதிய உயர்வால் நிறுவனங்களின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் என்றாலும் அதை விற்பனை விலையில் ஏற்றி, நுகர்வோரிடம் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

புலம்பெயரும் தொழிலாளர்கள் பெருந்தொற்றுக் காலத்தில் வேலையும் இல்லாமல், செலவுக்குப் பணமும் இல்லாமல், அரசின் உதவியும் இல்லாமல், புதிய இடத்தில் தவிப்பதைவிட தங்களுக்குப் பழகிய, சொந்த ஊர்களுக்குச் செல்வதே மேல் என்று முடிவெடுத்துப் போய்விட்டதால் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதம் முதல் 33 சதவீதம் வரையில் பற்றாக்குறை நிலவுகிறது. சில வேலைகளுக்குத் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் கொடுத்தேயாக வேண்டிய கட்டாயம் நேரிட்டிருக்கிறது.

வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை ஜூனிலிருந்து ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 1,26,000 அளவுக்குக் குறைந்து 15 லட்சமாகிவிட்டது. வேலை கிடைக்கப்பெற்றவர்கள் எண்ணிக்கை 2,35,000 முதல் 324 லட்சம் வரை உயர்ந்திருக்கிறது. இது இப்படியே நிரந்தரமாக இருக்குமா என்பது தெரியவில்லை. பிரிட்டனுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலும் பெரு நகரங்களில் இதுதான் நிலை.

அதேவேளையில், இந்தியாவில் ஆறுதலான சில விஷயங்களும் நடந்தேறிவருகின்றன. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் மோட்டார் வாகனத் துறையிலும் மீட்சி ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்து, விருந்தோம்பல் துறைகள் மீட்சி பெறுகின்றன. கனிமவளத் துறையும் இப்போது உற்பத்தியைத் தீவிரப்படுத்தி வருகிறது. எனவே, இங்கு இழந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்குச் சாதகமான நிலை உருவாகி வருகிறது. அரசுக்குக் கிடைக்கும் காலாண்டு வேலைவாய்ப்புகள் அறிக்கை இதைத் தெரிவிக்கிறது. விவசாயத் துறையின் சீரான பங்களிப்பு காரணமாக வேலைவாய்ப்பில் மீட்சி சாத்தியமாகியிருக்கிறது. கரோனா காலம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளிலிருந்து உலகம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவரும் என்று நம்புவோம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE