வட கொரியாவுக்கு வசந்தம் கொண்டுவருவாரா அதிபரின் தங்கை?

By எஸ்.எஸ்.லெனின்

ஒரு கன்னத்தில் முத்தமும் மறு கன்னத்தில் அறையும் கிடைத்தால் குழப்பம் நேருமா இல்லையா? வட கொரியாவின் புதிய அணுகுமுறையால், தென் கொரியா இப்படித்தான் குழம்பித் தவிக்கிறது. தென் கொரியாவுடனான ஹாட்லைன் தொடர்பைப் புதுப்பிக்க விருப்பம் தெரிவித்த கையோடு, ‘பாலிஸ்டிக்’, ‘க்ரூஸ்’ ரக ஏவுகணைகளைப் பரிசோதித்து பயம் காட்டவும் செய்கிறது வட கொரியா.

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் சார்பிலான இந்தப் புதிரான அண்மை வியூகங்களைப் பின்னிருந்து இயக்குபவர், அவரது தங்கை கிம் யோ ஜாங். அதிபருக்கு அடுத்த இடத்தில் தேசத்தை நிர்வகிப்பவராகவும், அதிபர் சார்பில் அயலுறவு முடிவுகளைத் தீர்மானிப்பவராகவும் அவர் அடையாளம் காணப்படுகிறார். உடல் நலிவுற்றிருப்பதாகச் சொல்லப்படும் கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாகவும் அறியப்பட்ட வகையில், தங்கை கிம் யோ ஜாங் உலக கவனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

கிம் யோ ஜாங்

வட கொரியாவின் ‘கிம்’ வழித்தோன்றல்

ஒரே கட்சியின் ஆளுகையில், ராணுவ பலமே பிரதானமாக, கிம் வம்சத்தினரே வட கொரியாவைத் தொடர்ந்து ஆண்டு வருகின்றனர். தேசத்தின் தற்போதைய அதிபர், அதிரடிக்குப் பேர்போன கிம் ஜாங் உன். இவரின் தாத்தா கிம் இல் சங், வட கொரியாவின் தேசத் தந்தையாகக் கொண்டாடப்படுபவர். பிரிவினைக்குப் பின்னரான வட கொரியாவின் முதல் ஆட்சியாளர் இவர்தான். அடுத்த வட கொரிய அதிபராகப் பதவியேற்ற, கிம் ஜாங் இல்லின் அதிகாரபூர்வ மனைவியரில் கோ யோங் ஹூய் என்பவர் வாயிலான 3 வாரிசுகளில் முதல் மகன் ஆளரவமின்றி இருக்கிறார். 2-வது மகன்தான் தற்போதைய அதிபரான கிம் ஜாங் உன். 3-வது வாரிசும் கிம் ஜாங் உன்னின் தங்கையுமான கிம் யோ ஜாங், தற்போதைய கொரிய தீபகற்பத்தின் சூறாவளியாகி இருக்கிறார்.

தகதகத்தாய தங்கை’

அதிபர் கிம் ஜாங் உன் குடும்பத்தினர் எவரும் வெளியுலகின் பார்வைக்குத் தட்டுப்படுவதில்லை. அவரது வாரிசுகள் குறித்த தகவல்களும் வெளியில் வராது. அண்ணன், தங்கையான கிம் ஜாங் உன் மற்றும் கிம் யோ ஜாங் கூட அப்படித்தான் வளர்ந்தார்கள். ஸ்விட்சர்லாந்து சர்வதேசப் பள்ளியில் இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது தொட்டே, அண்ணனுக்குப் பிரியமான தங்கையாக வளைய வந்தபோதும் பொதுவாழ்க்கைக்கு கிம் யோ வந்ததில்லை. தந்தையின் இறுதிச்சடங்கில் ஒருமுறை தட்டுப்பட்டதோடு சரி!

ஆனால், அண்ணன் அதிபராகி பத்தாண்டுகளாகும் சூழலில், கட்சியிலும் ஆட்சியிலும் படிப்படியாக முக்கியப் பொறுப்புகளுக்கு வளர்ந்திருக்கிறார் தங்கை. இருமுறை அண்ணனின் உடல்நிலை சிக்கலானபோது, தங்கையே மறைமுகமாக வட கொரியாவை ஆட்சி செய்தார். இப்போது அமெரிக்காவை மிரட்டுவது முதல் தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை தூதுவிடுவது வரை தங்கையே முன் நிற்கிறார். வட கொரியா மட்டுமன்றி சர்வதேசப் பார்வையிலும், கடந்த சில மாதங்களாக நடந்தேறிவரும் இந்த மாற்றத்தை புதிராகக் கவனிக்கிறார்கள். ஏனெனில், அதிபர் கிம் ஜாங் உன் இப்படியெல்லாம் ரத்த உறவுகளை அனுமதிப்பவர் அல்ல.

ஆதரவற்றுப்போன குடிமக்கள்

கேள்வி கேட்பவர்களுக்குச் சிறை, குற்றவாளிகளுக்குப் பொது இடத்தில் மரண தண்டனை என ஆப்கனின் தாலிபன்களுக்கு நிகரான காட்டாட்சி புகார்கள் வட கொரியா மீதும் உண்டு. தென் கொரியாவை ஆக்கிரமிப்பது, அதற்கு இடையூறாக இருக்கும் அமெரிக்காவை எதிர்ப்பது - இந்த 2 மட்டுமே வட கொரியர்களின் மூச்சாகத் திணிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவுக்கான அச்சுறுத்தலாகக் கண்டம் தாவும் ஏவுகணைகள், அணு குண்டுகள் என உலகின் அணுசக்தி நாடுகளின் வரிசையில் இடம்பெறவும் வட கொரியா தவிக்கிறது. வேலையின்மை, பஞ்சம் இவற்றால் நாட்டுமக்கள் அவஸ்தையில் உழன்றபோதும் ராணுவ பலத்தைப் பெருக்குவதிலே குறியாகவும் வெறியாகவும் இருந்துவருகிறது. ஆனால், யுத்த தளவாடங்கள் பசி தீர்க்காதே!

அதிபர் கிம் ஜாங்கின் வாக்குமூலத்தின்படியே, கடந்த 5 ஆண்டுகளாக வட கொரியா நசிந்துவருகிறது. அதிலும் அண்மை ஆண்டுகளின் புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் வட கொரியர்கள் தங்கள் வாழ்நாளில் சந்திக்காத பஞ்சத்தில் வீழ்ந்துள்ளனர். பெருந்தொற்றைத் தடுக்கும் முயற்சியில் எல்லைகளை இறுக்கி மூடியதில் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் விவசாய இடுபொருட்கள், மருந்துகள் நின்றுபோயின. போதாக்குறையாக, கரோனா முதல் அலை காலத்தில் வெளியில் சொல்லப்படாத சுகவீனத்தில் அதிபர் கிம் ஜாங் விழுந்தார். மாதக் கணக்கில் அவர் கோமா நிலையில் முடங்கியபோது, நாட்டு மக்கள் கையறு நிலையில் தவித்தனர். இந்தச் சவாலான நிலையில் அதிபரின் நிர்வாகப் பொறுப்புகள் தங்கை கிம் யோவிடம் கைமாறியபோது, வட கொரிய அரசாணியின் முக்கிய அதிகாரிகளே வாய் பிளந்தனர்.

தங்கைக்குத் தனியிடம்

கட்சி, ஆட்சி, ராணுவம் மூன்றுக்கும் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அதிபர் கிம் ஜாங் உன், தற்போது நிர்வாகத்தில் திணறி வருகிறார். இந்த மூன்றிலும் அதிபருக்கு அடுத்தபடியாக முக்கியப் பொறுப்பில் வீற்றிருந்தோர் அனைவரும், முன்னாள் அதிபரும் கிம் ஜாங்கின் தந்தையுமான கிம் ஜாங் இல்லின் தீவிர விசுவாசிகள். தந்தையின் அரசியல் வாரிசாகத் தனயனை நம்பியிருந்த அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்ததில், அது அதிருப்தியாகவும் அவ்வப்போது தலைகாட்ட ஆரம்பித்தது. சுதாரித்துக்கொண்ட கிம் ஜாங், அவர்கள் அனைவரையும் படிப்படியாக வெளியேற்றி, தனக்கான விசுவாசிகளாக இள ரத்தங்களைப் பாய்ச்ச முடிவெடுத்தார். அதன் முதல் நகர்வாக தங்கை கிம் யோவுக்குப் புதிய பொறுப்புகளைத் தந்திருக்கிறார்.

கிம் யோவின் கணவர் குடும்பம், நாட்டின் அதிகாரம் மிக்க அமைப்பான கொரிய தொழிலாளர் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பதும் ஒருவகையில் உதவியானது. அதிபரின் பிரதான ஆலோசகராக அறியப்பட்ட கிம் யோ, பின்னர் அரசை வழிநடத்தும் ஆணையத்தின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். அந்த வகையில், ஆணையத்தின் இளம் வயது நபர் மற்றும் ஒரே பெண் இவர் மட்டுமே!

வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை

அண்ணனுக்குத் தப்பாத தங்கை

“நீங்கள் அடுத்த 4 வருடங்களுக்கு அமைதியாக உறங்க வேண்டுமெனில் எங்களைச் சீண்டாமல் இருப்பது உத்தமம்.” இது, அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றபோது அமெரிக்காவுக்கு கிம் யோ விடுத்த எச்சரிக்கை. எல்லையில் தப்பிச்செல்லும் வட கொரிய எதிர்ப்பாளர்கள் தென் கொரிய திசையிலிருந்து பலூன்கள் மூலம் வட கொரிய எதிர்ப்புப் பிரசுரங்களை விநியோகித்துவந்தனர். இதில் கடுப்பான கிம் யோ, இரு நாட்டுத் தொடர்புக்குமாக எல்லையில் இருந்த அலுவலகத்தைக் குண்டு வீசி தகர்க்கச் செய்தார். அதிரடியில் மட்டுமல்ல, சமயோசிதத்திலும் அவரது பாணி தனியானது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தொடர்ச்சியாக பாலிஸ்டிக், க்ரூஸ் ஏவுகணைகளைப் பரிசோதித்து தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைப் புலம்பவிட்டதோடு, “தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்; ஹாட்லைன் ஏற்பாட்டைப் புதுப்பிப்போம்” என புதிர் சாமரம் வீசவும் செய்கிறார்.

வடகொரியா ராணுவத் தளவாடங்கள்

அண்ணனின் முரட்டு அணுகுமுறைக்கு மாறான தங்கையின் புதிரான இந்த நகர்வுகள், தென் கொரியாவை குழம்பி விதிர்க்க வைத்திருக்கிறது. இதன் மூலம் தங்களது அரசியல் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காததோடு, வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளில் தளர்வுகளைப் பெறுவது என காய் நகர்த்துகிறார் கிம் யோ. அதற்கான சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன!

ஜிம் யோ ஜாங்

அடுத்த அதிபரா கிம் யோ?

வட கொரியாவின் தென் கொரிய - அமெரிக்கா எதிர்ப்பு நிலையில் சமரசம் இல்லாதபோதும், வட கொரியர்கள் எதிர்பார்க்கும் வாழ்வியல் சலுகைகள் பலவற்றை வழங்குவதில் கிம் யோ தாராள மனதோடு இருக்கிறார் என்கிறார்கள். குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, தென் கொரியாவைப் பார்த்து வட கொரியர்கள் ஏங்கும் கலாச்சார மாற்றங்களுக்குச் செவிமெடுப்பது, கல்வி, சுகாதாரம், விவசாயத் துறைகளில் தன்னிறைவு ஆகியவற்றில் கிம் யோ ஆர்வம் கொண்டிருக்கிறார். மேற்கத்திய சமூக ஊடக பதிவுகளில் தன்னைப் பற்றிய ட்ரெண்டிங்கை தொடர்ந்து கண்காணிக்கும் அவரது ஆர்வத்தின் அடிப்படையிலும் வரவேற்கத்தக்க மாற்றங்கள் நிச்சயம் என்கிறார்கள், தென் கொரியாவில் அடைக்கலமாகியிருக்கும் அவரது பழைய நண்பர்கள்.

2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காகத் தென் கொரியா சென்ற கிம் யோ, கொரியப் போருக்குப் பின்னரான அதிகாரபூர்வ வட கொரிய நட்பை புதுப்பித்தார். இடையிடையே சலசலப்பு தந்தாலும், அமெரிக்காவைத் தவிர்த்துவிட்டு தென் கொரியாவுடன் நட்புக்கரம் நீட்ட அவர் தயாராக இருக்கிறார்.

புகை, மது, சீன போதை வஸ்துகள் என ஆரோக்கியம் கெட்டு அடுத்தடுத்த அறுவை சிகிச்சைகளால் சோர்ந்திருக்கும் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அதிக ஓய்வு தேவைப்படுவதால், தனது நம்பிக்கைக்குரிய தங்கையை களமாட முழுமனதுடன் அனுமதித்திருக்கிறார். தங்கையின் திடமும் விசுவாசமுமான செயல்பாடுகளில் அவர் திருப்தி கொண்டிருக்கிறார். அந்த நம்பிக்கையில் தனது நிழலாகச் செயல்படவும் அனுமதித்து வருகிறார்.

மீண்டும் கிம் ஜாங் உடல் நலிவுற்றால். நேரடி அதிபர் பொறுப்பும் தங்கைக்குத் தேடி வரலாம். அதை நோக்கிய அடியெடுப்பில், வட கொரியர்களின் மனமார்ந்த வரவேற்புக்கான நடவடிக்கைகளைப் படிப்படியாக மேற்கொள்வாரா, கொரிய தீபகற்பத்தின் சுபகர மாற்றங்களுக்கு வித்திடுவாரா என்பதும் விரைவில் தெரிந்துவிடும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE