பாகிஸ்தானில் வாழும் ‘நாடற்ற’ வங்காளிகள்!

By ஆர்.என்.சர்மா

உலகம் எங்கும் அகதிகள்மயம் என்றால் மிகையில்லை. நாடுகளுக்கு இடையிலான போரின்போதும் உள்நாட்டுக் குழப்பங்களாலும் மக்கள் அகதிகளாகிறார்கள். இப்படி அகதிகளாவோரில் பெரும்பாலானோர் ஏழைகள், தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்கள் என்பதுதான் இன்னும் துயரம். ஏற்கெனவே அல்லலுறும் அம்மக்கள், அகதிகள் ஆன பின்னர் இன்னும் துயரத்தை அனுபவிக்கிறார்கள்.

பாகிஸ்தான் என்றாலே பஞ்சாபியர், சிந்திகள், பஷ்டூன்கள், முஹாஜிர்கள் என்ற நால் வகையினரைத்தான் நாம் அறிவோம். பிரிவினையின்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்று குடியேறிய இந்திய முஸ்லிம்கள் முஹாஜிர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து சென்றிருந்தாலும் உருது என்ற கலப்பு மொழியைப் பேசுபவர்கள். இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் பெரும்பாலும் அரபி, பார்சி, பஷ்டூன் ஆகிய மொழிகளைத்தான் பேசினர். இவற்றுடன் இந்தியும் கலந்து உருது என்ற கலப்பு மொழி உருவானது. இந்தியாவிலிருந்து குடியேறிய முஹாஜிர்கள் அதிகம் வாழ்வது கராச்சி என்ற துறைமுக நகரத்தில்தான்.

கராச்சியை, கிட்டத்தட்ட மும்பையுடன் ஒப்பிடலாம். பாகிஸ்தானின் வணிகத் துறைமுகமும் அதுதான், கடற்படைக்கு மையமும் அதுதான். அங்கே 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கமொழி பேசும் மக்களும் வாழ்கின்றனர். 1971-ல் கிழக்குப் பாகிஸ்தான் இந்திய அரசின் உதவியுடன் போர் செய்து, மேற்கு பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற்றது. அதற்குப் பிறகு அது வங்கதேசம் என்ற பெயரில் சுதந்திர நாடாகிவிட்டது. வங்கதேசத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் சேர்ந்து வாழ்கின்றனர். மத வேறுபாடுகளைக் கடந்து, மொழி அவர்களை ஒன்றாக்கி வைத்திருக்கிறது.

பாகிஸ்தானில் 1971-க்கு முன்புவரை ஏராளமான வங்காள முஸ்லிம்கள் வாழ்ந்தனர். வங்கதேசம் உருவான பிறகும் அவர்களில் பலர் பாகிஸ்தானிலேயே தொடர்ந்து வசிக்கின்றனர். 1971-க்குப் பிறகு அவர்களுடைய நிலைமை பரிதாபகரமாகிவிட்டது. அவர்களுக்குப் பாகிஸ்தானிய குடியுரிமை தரப்படவில்லை. ‘மொழியில் மட்டும் நீங்கள் வேற்றாள் இல்லை, இனத்திலும் நீங்கள் வங்காளிகள். எனவே எங்களுக்குச் சமமானவர்கள் இல்லை’ என்று சொல்லாமல் சொல்லும் வகையில் குடியுரிமையை அளிக்கவில்லை பாகிஸ்தான் அரசு. இதனால் அவர்கள், நாடற்றவர்கள் என்ற அடையாளத்துடன் பாகிஸ்தானில் வாழ்கின்றனர். குடியுரிமை இல்லை என்பதால் வாக்குரிமையும் இல்லை. வாக்குரிமை இல்லாதவர்களை, எந்த அரசியல் கட்சிதான் லட்சியம் செய்யும்? எனவே, இவர்கள் இருந்தும் இல்லாதவர்களாகிவிட்டார்கள்.

குடியுரிமை இல்லை என்பதால் குடிமைப்பொருள் பெறவும் முடியாது. பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்க முடியாது. வங்கிகளில் கணக்கு தொடங்க முடியாது. பாஸ்போர்ட், விசா பெற முடியாது. வெறும் கூலிக்காரர்களாக வேலைசெய்து வயிற்றைக் கழுவிக்கொள்ளலாம். அவ்வளவுதான். வங்காளிகளுக்காகப் பரிந்து பேச பெரும்பான்மைச் சமூகத்தில் அதிகம் பேர் இல்லை. பாகிஸ்தானின் இப்போதைய பிரதமர் இம்ரான் கான், வங்காளிகளுக்குக் குடியுரிமை பெற்றுத்தருவதாக ஒரு காலத்தில் வாக்குறுதி தந்தவர். எல்லாத் தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுகின்றனவா என்ன? இன்றுவரை பாகிஸ்தான்வாழ் வங்காள முஸ்லிம்கள் நாடற்றவர்களாக, அந்நியர்களாக இருக்கின்றனர். இப்படி லட்சக்கணக்கானவர்களை வைத்திருப்பதில் அரசுக்கும் தொழில் – வர்த்தகத் துறைக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் ஆதாயம் இருக்கிறது. எந்தவித சட்டபூர்வ உரிமையையும் கேட்டுப் பெற முடியாமல், குறைந்த கூலிக்கு வேலை செய்பவர்களாக அவர்கள் வாழவேண்டிய சூழல் தொடர்கிறது. குடியுரிமை இல்லை என்பதால் நிலம், வீட்டுமனை வாங்க முடியாது. எனவே மிகப் பெரிய குடிசைப் பகுதியில்தான் அவர்கள் வாழ்கின்றனர். காற்று, வெளிச்சம் இல்லாத, குடிநீர் வசதி போதாத இடத்தில் வசிக்கின்றனர்.

இப்படி மனிதர்களாகவே நடத்தப்படாமல் இருக்கும் வங்காளி பாகிஸ்தானியர் குறித்து, ஐக்கிய நாடுகள் சபையும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. மனித உரிமைகள் குறித்துப் பேசுவோரும் கண்டுகொள்வதில்லை. உரிமைகளை அதிகம் வலியுறுத்தினால் அரசால் ஒடுக்கப்படுவோம் என்கிற அச்சத்தில், அரசின் பார்வையே படாவிட்டாலும் சரி வாழ்ந்தால் போதும் என்று வங்காளி பாகிஸ்தானியர்கள் வாழ்கிறார்கள். எப்படிப்பட்ட நாடற்ற அகதிகளாக இருந்தாலும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அந்தந்த நாட்டின் அரசியல் சட்டப்படி அங்கே குடிமகனாக முடியும். வங்காளி பாகிஸ்தானியருக்கு அந்த பாக்கியமும் கிட்டவில்லை.

பாகிஸ்தான் என்ன முழு ஜனநாயக உரிமைகளைப் போற்றும் நாடா? ராணுவம் வைத்ததுதான் சட்டம். இவர்களைப் பற்றி இந்திய அரசியல்வாதிகளும் வங்கதேச அரசியல்வாதிகளும்கூட பேசாமலிருப்பதுதான் வியப்பாக இருக்கிறது. அசாமில் குடியேறிய அந்நியர்களை அடையாளம் கண்டு வெளியேற்றும் இந்திய குடியேற்ற உரிமைச் சட்டத்துக்கு எதிராக, மனிதாபிமான அடிப்படையில் நியாயமான குரல்கள் எழுந்திருக்கின்றன. அதேபோல், பாகிஸ்தான் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் தங்கள் நாட்டிலேயே நாடற்றவர்களாக வாழும் வங்காளிகள் மற்றும் பிற இனத்தவர் குறித்தும் பேச வேண்டும். மதம், இனம், மொழி போன்ற காரணிகளைச் சொல்லி மனிதாபிமானமற்ற வகையில் அரசுகள் இனியும் நடந்துகொள்ளக் கூடாது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE