‘ஜனநாயக இயக்கம்’ என சீன 5ஜி மொபைலில் எழுத முடியாது!

By காமதேனு டீம்

‘சீனாவில் தயாரிக்கப்படும் 5ஜி மொபைல் போன்களைப் புதிதாக வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள், வாங்கியிருந்தால் விரைவில் விற்றுவிடுங்கள்’ என்று லிதுவேனிய நாட்டு ராணுவம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அந்நாட்டின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம், சீன 5ஜி மொபைல் போன்களை ஆராய்ந்து பார்த்த பிறகு, நுகர்வோரின் அந்தரங்கம் காக்கப்பட இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறது.

ஜியோமி தயாரிப்பு மொபைல்களில் அக தணிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்னொன்று, வெளியிலிருந்து யாரும் தகவல்களைப் பெறுவதைத் தடுக்கும் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என்று அது எச்சரிக்கிறது. லிதுவேனிய பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் மார்கிரிஸ் அபுகெவிசியஸ் இந்த வேண்டுகோளை வெளிப்படையாக விடுத்திருக்கிறார்.

‘திபெத்தை விடுதலை செய்’, ‘திபெத்தின் சுதந்திரம் நீடுழி வாழ்க’, ‘ஜனநாயக இயக்கம்’ என்பது போன்ற 450 சொற்களை சீன 5ஜி மொபைல்களில் பயன்படுத்தவே முடியாதபடிக்கு அதில் அகதணிக்கை ஏற்பாடுகள் உள்ளன. ஜியோமி நிறுவனத்தின் இன்டெர்நெட் பிரவுசர் உட்பட அதன் ஆப்களும் இதற்கேற்ற ஏற்பாடுகளில் உள்ளனவாம்.

ஐரோப்பாவில் விற்கப்படும் சீன 5ஜி போன்களில் இவை சுவிட்ச் ஆஃப் செய்யப்படுகின்றன என்றாலும், இதை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இயக்க நிறுவனத்தால் முடியும். ஆனால், ஜியோமி நிறுவனம், ”இது உண்மையல்ல, நாங்கள் வாடிக்கையாளர்களின் தகவல் பரிமாற்றங்களைத் தணிக்கை செய்வதில்லை” என்று பிபிசி தொலைக்காட்சி நிருபர் கேட்டபோது மறுத்துள்ளது.

போன் பரிமாற்றத் தரவுகள் சிங்கப்பூரில் உள்ள சர்வருக்கு அனுப்பப்படுவதையும் லிதுவேனிய பாதுகாப்புத் துறை ஆய்வில் கண்டுபிடித்துள்ளது. ஹுவாவே பி40 5ஜி தொலைபேசியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் அந்தரங்கத் தகவல்கள் மற்றவர்களால் திருடப்படும் அளவுக்கு அதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவு என்று லிதுவேனிய பாதுகாப்புத் துறையும் தேசிய சைபர் பாதுகாப்பு மையமும் சேர்ந்து எச்சரிக்கின்றன.

”எந்தெந்த நாடுகளில் நாங்கள் சேவையை அளிக்கிறோமோ அந்தந்த நாடுகளின் சட்டங்களையும் விதிமுறைகளையும் மதிக்கிறோம். சைபர் அம்ச பாதுகாப்பு, அந்தரங்கம் காக்கப்படுவது ஆகியவற்றை மீறுவதில்லை. மொபைல் தயாரிப்பாளர்கள் தங்களுடைய பயன்பாட்டுக்கு ஆப்களைப் பயன்படுத்தும்போது, அவர்களுடைய தேவைகளுக்கேற்ப மட்டுமே மூன்றாவது தரப்பு ஆப்களை சேவைக்கு அனுமதிக்கிறோம்.

இதை எல்லா ஆஃப் நிறுவனங்களும்தான் செய்கின்றன. அதே சமயம் ஆப்கள் பாதுகாப்பானவைதானா என்பதை நாங்கள் ஒரு முறை சோதித்த பிறகே வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அனுமதிக்கிறோம்” என்று நிறுவனம் இதற்குப் பதில் அளித்துள்ளது.

5ஜியில் ஒன்பிளஸ் என்பதைச் சோதித்தபோது அதில் பிரச்சினைகள் இல்லையென்று தெரிந்துகொண்டது லிதுவேனிய பாதுகாப்புத் துறை. லிதுவேனியாவுக்கும் சீனாவுக்கும் தூதரக உறவில் பதற்றம் இருக்கும் நிலையில் இந்தச் செய்தி வெளியாகி இருக்கிறது. லிதுவேனியாவில் தங்களுடைய தொழில்-வர்த்தக தொடர்புக்காக இருக்கும் பிரதிநிதிகள் அலுவலகத்தை ‘தைவானிய பிரதிநிதிகள் அலுவலகம்’ என்று இனி அழைப்போம் என்று லிதுவேனியா அறிவித்தது.

அது தைவானைத் தனி நாடாக அங்கீகரிப்பதாகிவிடும் என்று கருதும் சீனா, பெய்ஜிங்கிலிருந்து உங்களுடைய தூதரைத் திரும்பப் பெறுங்கள் என்று லிதுவேனியாவிடம் கூறியது. பதிலுக்கு லிதுவேனியாவிலிருந்து தங்களுடைய தூதரைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் எச்சரித்துள்ளது.

இந்த சர்ச்சை வரக்கூடாது என்று ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும், ‘தைவான் நாட்டுப் பிரதிநிதி’ என்று கூறாமல், தலைநகரான தைபே பெயரிலேயே அவர்களை ‘தைபே பிரதிநிதி’ என்று அழைத்து, மோதல் வராமல் பார்த்துக் கொள்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE