பனிப்போர் காலம் வருக!

By முனைவர் து.ரவிக்குமார் எம்.பி.,

“அமெரிக்கா மீண்டும் ஒரு பனிப் போரை விரும்பவில்லை’’ என்று ஐநா பொது அவையின் கூட்டத்தில், செப்டம்பர் 21 அன்று பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் ஒன்றுபட்டு நின்று கரோனா பெருந்தொற்று, பருவநிலை மாற்றம், மனித உரிமைகள் ஆகிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பாடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

1990-ல் சோவியத் யூனியனின் தகர்வுக்குப் பிறகு, 1945 முதல் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் 45 ஆண்டுகளாக நீடித்து வந்த பனிப்போர் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு ஏற்பட்ட உலக ஒழுங்கில், எதிரியே இல்லாத ஒற்றை எஜமானனாக உயர்ந்தது அமெரிக்கா. கடந்த 30 ஆண்டுகளாக அந்த நிலையே நீடித்து வருகிறது.

அண்மைக்காலமாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி, அதன் காரணமாக சீன ஆட்சியாளர்களிடம் ஏற்பட்டிருக்கும் விரிவாக்க வேட்கை ஆகியவை அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு சவாலாக அமைந்துள்ளன. உலகின் 2 பெரிய பொருளாதார நாடுகளாகக் கணிக்கப்படும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போட்டி கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் போட்டியாகவும் உருவெடுத்திருக்கிறது. ஐநா பொது அவையின் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றும் போது, ஐநா பொதுச் செயலாளர் அமெரிக்க - சீன முறுகல் நிலை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். அதற்குப் பதில் சொல்லும் விதமாகவே ஜோ பைடன் பேச்சு அமைந்து இருக்கிறது எனக் கருதலாம்.

பனிப்போர் காலம் என்று அழைக்கப்படும் 1945-1990-ம் ஆண்டுகளில், அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் நீடித்த மோதல் நிலை, உலகை 2 அணிகளாகப் பிரித்து வைத்திருந்தது. சோவியத் யூனியனிலும் அணு ஆயுதம் உருவாக்கப்பட்ட பிறகு, அவ்வப்போது ‘அணு ஆயுத யுத்தம் மூண்டு விடுமோ’ என்ற அச்சம் ( ஹாலிவுட் திரைப்படங்கள் மூலம்) கிளப்பப்பட்டாலும், இன்னொரு உலக யுத்தம் வராமல் போனதற்கு இரு வல்லரசுகளின் அணு ஆயுதச் சமநிலையே காரணமாக அமைந்தது.

பனிப்போர் காலத்தின் முடிவு என்பது சோவியத் யூனியனின் வீழ்ச்சியால் விளைந்தது. ‘பனிப்போர் காலத்தின் முடிவு, ஆயுதப் போட்டியைக் குறைத்துவிட்டது’ என்று சிலரால் சாதகமாகப் பார்க்கப்பட்டாலும் அது அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்துக்கும், ராணுவ மேலாதிக்கத்துக்குமே வழி செய்து இருக்கிறது.

உலகம் இரு துருவங்களாகப் பிரிந்து இருந்தபோது, சிறிய நாடுகள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். எந்தவொரு வல்லரசும் சிறிய நாடுகளை அச்சுறுத்த முடியாத நிலை இருந்தது. அது மட்டுமல்லாமல், காலனிய தளைகளில் சிக்குண்டிருந்த சில நாடுகள் அதிலிருந்து விடுபட்டு, சுதந்திர நாடுகளாக உருவெடுப்பதற்குப் பனிப்போர் காலம் வழிவகுத்தது.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது, மீண்டும் ஒரு பனிப்போர் காலம் உருவாவது நல்லது என்றே தோன்றுகிறது. அமெரிக்காவின் மேலாதிக்கம் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும். உலக அமைதிக்கும், சிறிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது மிக மிக அவசியமென்றே கருதுகிறேன்.

பனிப்போர் காலம் முடிவுக்கு வந்ததற்குப் பிறகான, கடந்த 30 ஆண்டுகளில்தான் உலகெங்கும் மத அடிப்படைவாதம் மேலோங்கியிருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதற்கும் இந்த உலகம் ஒரு துருவ உலகமாக மாறியதற்கும் இடையே உள்ள தொடர்பு ஆராயப்பட வேண்டும்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போட்டி ராணுவப் போட்டியாக உருவெடுக்குமானால், அது பனிப்போராக மாறுமானால் இந்தியா என்ன நிலை எடுப்பது? என்பதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE