ஆப்கானிஸ்தானிலிருந்து குஜராத்துக்கு, ரூ.20,900 கோடி மதிப்பிலான ஹெராயின் கப்பல் வழியாக அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் போதைப்பொருள் யாருக்கு அனுப்பப்பட்டது என்பதில் மர்மம் நீடிக்கிறது.
ஈரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகம் வழியாக, குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்குக் கடந்த வாரம் 2 பெரிய சரக்குப் பெட்டகங்கள் வந்தன. அங்கிருந்து விஜயவாடாவுக்கு அந்தச் சரக்குகள் கொண்டுசெல்லப்படவிருந்தன. அப்போது, சந்தேகத்தின்பேரில் மத்திய சுங்கத் துறையின் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினர் சரக்குப் பெட்டகங்களைத் திறந்து பார்த்தபோது, அவற்றில் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. விஜயவாடாவைச் சேர்ந்த ஆஷி டிரேடிங் என்கிற நிறுவனம், டால்கம் பவுடர் என்ற பெயரில் இந்தச் சரக்கை வரவழைத்திருக்கிறது என்றும் தெரியவந்தது. 2 பெட்டகங்களிலும் சேர்த்து மொத்தம் 2,988 கிலோ ஹெராயின் இருந்தது. ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் நகரில் இருக்கும் ஹஸன் உசைன் லிமிடெட் நிறுவனம் இதை அனுப்பியிருக்கிறது.
போலி நிறுவனம்
சரக்கு சென்றுசேர வேண்டிய முகவரி சத்யநாராயணபுரம், விஜயவாடா என்று இருந்தது. அந்த முகவரியில் அதிகாரிகள் சென்று தேடியபோது, ஊரின் ஒதுக்குப்புறத்தில் மஞ்சள் நிற சுண்ணாம்பு அடித்த சாதாரணமான வீடு என்று தெரியவந்தது. அந்த வீடு பூட்டிக்கிடந்ததால், அக்கம்பக்கத்தில் அதிகாரிகள் விசாரித்தனர். அந்த வீட்டுக்கு யாரும் வருவதில்லை என்று சிலரும், சில மாதங்களுக்கு முன்னால் சிலர் வந்து சரக்குகளை ஏற்றுவதும் இறக்குவதுமாக இருந்தார்கள் என்று சிலரும் பதிலளித்தனர்.
சென்னை வரை நீளும் தொடர்பு
சென்னையைச் சேர்ந்த கோவிந்தராஜு துர்கா பூர்ணா வைஷாலி என்ற பெண்ணின் பெயரில், அந்த வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. அந்த நிறுவனத்தின் தொடர்பு எண், மச்சாவரம் சுதாகர் என்பவருக்குச் சொந்தமானது. வைஷாலியின் கணவரான சுதாகர், காக்கிநாடாவைச் சேர்ந்தவர். அந்த நிறுவனத்தின் ஏற்றுமதி – இறக்குமதி உரிமம் வைஷாலி பெயரில் இருந்தது. கணவன், மனைவி இருவரும் சென்னையில் கொளப்பாக்கம் என்ற இடத்தில் கடந்த 8 ஆண்டுகளாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசிக்கின்றனர். இந்தத் தகவல்கள் விசாரணையில் தெரியவந்திருக்கின்றன.
தற்போது வைஷாலியைப் புலனாய்வுக்காகக் காவலில் எடுத்துள்ளனர். சுதாகர் தலைமறைவாகிவிட்டார்.
இதற்கிடையே அந்தச் சரக்கு விஜயவாடாவுக்கு அல்ல, டெல்லிக்குச் செல்வதற்காகத் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தது என்கிறார் விஜயவாடா காவல் துறை ஆணையர் பி. சீனிவாசுலு. இறக்குமதி நிறுவனம் தந்த முகவரியைத் தவிர, விஜயவாடாவுக்கும் சரக்குக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.