ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது, சிகையலங்காரம் செய்யும் முடிதிருத்துநர்கள்தான். தாலிபான்கள் விதிக்கும் கடுமையான கட்டுப்பாடுகளின் நேரடி விளைவுகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.
தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15-ல் ஆட்சிக்கு வந்தது முதல், ஆப்கானிஸ்தானியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகிவிட்டனர். நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. வேலைவாய்ப்பும் வருமானமும் அருகிவிட்டது. மேற்கத்திய நாடுகள் உட்பட பல நாடுகள் அங்கீகரிக்கத் தயங்குவதால், சர்வதேச அமைப்புகளின் உதவிகளும் உறவுகளும் கேள்விக்குறியாகிவிட்டன. மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துவிட்டது. வங்கிகளிடமும் பணம் இல்லை. விவசாயத்தில் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. விளைச்சல் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கையில் பணம் இல்லாததாலும், முடியை அலங்கரித்தால் மதக் கோட்பாடுகளுக்கு விரோதம் என்று கூறி தாலிபான்கள் வீதியில் நிறுத்தி தண்டிக்கலாம் எனும் அச்சத்திலும் பலர் சலூன்களுக்குப் போவதையே நிறுத்திவிட்டார்கள். அப்படியே சலூனுக்கு வரும் சிலரும் தாடிகளை மழிக்காமல், தலைமுடியை மட்டும் லேசாக வெட்டச் சொல்கின்றனர். தலைமுடியை வெட்ட முன்பு 6 டாலர் கொடுத்தவர்கள் இப்போது வெறும் ஒரு டாலர்தான் கொடுக்கின்றனர். சரி.. இவர்களாவது சலூனுக்குத் துணிந்து வருகிறார்களே என்று சிகை திருத்துநர்கள் ஏதும் பேசாமல் வாங்கிக்கொள்கின்றனர். ஒரு நாளைக்கு 15 டாலர்களுக்குக் குறையாமல் சம்பாதித்துவந்த சிகை திருத்துநர்களுக்கு, இப்போது நாள் முழுவதற்குமே 5 முதல் 7 டாலர்கள்தான் கிடைக்கின்றன. குறிப்பாக, ஆப்னின் மேற்குப் பகுதியில் உள்ள ஹேரட் நகர முடிதிருத்துநர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் துயரம் நிறைந்தவை.
தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துவிட்டதால், அவர்கள் மெச்சிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மக்களும் அவர்களைப் போலவே நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொள்கின்றனர். தாலிபான்களைவிட தாலிபான்களுக்கு உளவு சொல்லும் அக்கம்பக்கத்தார் குறித்து, மக்களுக்கு அச்சம் அதிகம் இருக்கிறது. எனவே, இப்போது பெரும்பாலானவர்கள் தாடி மீது கை வைப்பதே இல்லை. சிகையைக்கூட எவ்வளவு நீளம் வேண்டுமானாலும் வளரட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்.
தாலிபான்களின் முந்தைய ஆட்சிக்காலத்தில், தாடியை நீளமாக வளர்த்துக்கொள்ளாத ஆண்களுக்குச் சிறைத் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.