நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கைது

By காமதேனு டீம்

இஸ்ரேல் சிறையிலிருந்து 6 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்ரேலிய ராணுவமும் காவல் துறையும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கைது செய்துள்ளன.

இஸ்ரேலின் வடக்குப் பகுதியின் கட்டுக்காவல் மிகுந்த கில்போவா சிறையிலிருந்து செப்டம்பர் 6 இரவில் ஆறு கைதிகள் தரைக்கடியில் சுரங்கப்பாதை வெட்டி தப்பிச் சென்றனர். பாலஸ்தீன விடுதலைப் போராளிகளான அவர்கள் தப்பிச் சென்றதை கவுரவப் பிரச்சினையாகக் கருதும் இஸ்ரேல் படையினர், கடுமையான வழிமுறைகளைக் கையாண்டு பாலஸ்தீனர்களைக் கைதுசெய்துவருகின்றனர். இத்தனைக்கும் தப்பிச் சென்ற 6 பேரில் 4 பேர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டுவிட்டனர். மிச்சம் இருந்த 2 கைதிகளும் இஸ்ரேல் ராணுவத்திடம் சரணடைந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

எனினும், கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 14 பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். 13 வயது, 15 வயது சிறுவர்களைக்கூட இரக்கமில்லாமல் அடித்து விசாரிப்பதுடன் உணவு குடிநீர்கூடத் தராமல் இஸ்ரேல் படையினர் துன்புறுத்துகின்றனர். ரமல்லா, ஹெப்ரான், நபலுஸ் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், தப்பிச் சென்றவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என்று பலரின் வீடுகளுக்கும் நுழைந்து ஆண்களை அடித்து இழுத்துச் செல்கின்றனர். முஸ்தபா (13), முகம்மது (15) ஆகிய சிறுவர்களை விசாரணைக்காகப் பிடித்த இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் தரையில் அவர்களைப் படுக்கவைத்து தரதரவென்று இழுத்துச் சென்று காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர் என்று அவர்களுடைய உறவினர் ஆமிரா தெரிவிக்கிறார்.

2000-ம் ஆண்டு முதல் இதுவரையில் 12,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனச் சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய ராணுவத்தினர் மீதும், யூதக் குடியிருப்புகள் மீதும் கல்வீசியதாக அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருபதாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். சிறுவர்கள் மட்டுமல்ல மாணவர்களும் குறிவைத்துக் கைது செய்யப்படுகின்றனர்.

இந்த இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவும் தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் வழக்குகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். பாலஸ்தீனர்கள் இருக்கும் எல்லா அமைப்புகளையுமே சட்டவிரோத அமைப்புகள் என்றே இஸ்ரேல் அழைப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE