4 இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் உயிரிழப்பு

By KU BUREAU

புதுடெல்லி: ரஷ்யாவில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 இந்திய மாணவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர அங்குள்ள இந்திய தூதரகம் நடவடிக் கைகளை எடுத்து வருகிறது.

ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள வோல்கோவ் ஆற்றில் குளித்த போது 5 மாணவர்கள் சுழலில் சிக்கிக் கொண்டனர். இதில்ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டநிலையில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். இதுவரை இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 2 மாணவர்களின் உடல்களை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இறந்தவர்களின் உடல்களை தாயகத்துக்கு கொண்டு வர பல்கலைக்கழகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் உதவியை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம், நாடியுள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், “உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். நீரில்மூழ்கி உயிரிழந்த நான்கு மாணவர்களும் மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். உடல்களை கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்துள்ளது.

ஆற்றில் மூழ்கி இறந்த மாணவர்கள் அனந்த்ராவ் தேசாலே, சகோதரர்கள் ஜிஷான் அஷ்பக் பிஞ்சாரி, ஜியா ஃபிரோஜ் பிஞ்சாரி மற்றும் மாலிக் குலாம்கவுஸ் முகமது என்பது தெரியவந்தது. உயிர்பிழைத்த மாணவியின் பெயர் நிஷா பூபேஷ் சோனாவானே. அவர்கள் அனைவரும் 18 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE