தாலிபான்கள் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு மேலும் ஒரு தலைகுனிவு!

By எஸ்.எஸ்.லெனின்

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் தருவாயில், அமெரிக்கா கடைசியாக நடத்திய ட்ரோன் வழித் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என்று அமெரிக்காவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது, ஆப்கன் அத்தியாயத்தில் அதற்கு மற்றுமொரு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதும், அங்கிருந்து அமெரிக்கா வெளியேறியதும், கடந்த மாத இறுதியில் ஒரு சேர நடந்தன. ஆகஸ்ட் 31-க்குள் ஆப்கன் மண்ணிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேற அமெரிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கான கடைசிக்கட்ட ஏற்பாடுகள் மும்முரமாக இருந்தபோது, தாலிபான் மீதான அச்சத்தில் ஆப்கானியர் ஏராளமானோரும் அந்நாட்டிலிருந்து வெளியேறும் பொருட்டு காபூல் விமான நிலையத்தில் குழுமினார்கள். அவர்களின் மத்தியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 150-க்கும் மேற்பட்ட ஆப்கானியர், 13 அமெரிக்கர்கள் உட்பட ஏராளமானோர் பலியானார்கள்.

ட்ரோன் தாக்குதல் நடந்த இடத்தில்...

ஆகஸ்ட் 26 அன்று நடந்த இந்தச் சம்பவத்துக்கு பதிலடியாக, ஆகஸ்ட் 29 அன்று ட்ரோன் வழி தாக்குதல் ஒன்றை அமெரிக்கப் படை முன்னெடுத்தது. இதில், விமான நிலைய தற்கொலை குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்ற ஐஎஸ்-கோரோசான் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரு குழு மீது தாக்குதல் பாய்ந்தது. வெற்றிகரமான அந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் 10 பேர் நிகழிடத்திலேயே இறந்ததாக பின்னர் அமெரிக்கா அறிவித்தது.

ஆனால், அங்கு பலியான 10 பேரும் சாமானிய ஆப்கன் குடிமக்கள் என்றும் அவர்களில் 7 பேர் குழந்தைகள் என்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டும் எழுந்தது. இதனிடையே அந்த தாக்குதல் சம்பவம் குறித்து தற்போது அமெரிக்காவே முன்வந்து விளக்கமும் அளித்துள்ளது. அதில், மேற்படி தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே அப்பாவிகள் என்று உறுதிப்படுத்தியதுடன், பலியானவர்களுக்கு இரங்கலும் சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்துள்ளது அமெரிக்கா.

அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாய்ட் ஆஸ்டின், அமெரிக்க ராணுவத்தின் கமாண்டர் ஜெனரல் கென்னத் மெக்.கென்ஸி ஆகியோர் இந்த விளக்கங்களை வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 20 ஆண்டுகள் முகாமிட்ட அமெரிக்க ராணுவத்தால் தாலிபான்களை கட்டுப்படுத்த முடியாததுடன், ஆப்கன் மக்களுக்கு எந்தத் தீர்வையும் தராது அமெரிக்கா பாதியில் வெளியேறுவதாக சர்வதேசச் சமூகத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தன. அந்த வரிசையில் அங்கு அமெரிக்கா நடத்திய கடைசி தாக்குதலிலும் அப்பாவிகள் கொல்லப்பட்டிருப்பது அமெரிக்காவை மேலும் தர்மசங்கடத்தில் தள்ளியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE