2021-ல் பரபரப்பை ஏற்படுத்தியவர்கள்: மோடி, மம்தா, ஆதர் பூனாவாலா

By காமதேனு டீம்

உலகில் 2021-ம் ஆண்டில் பரபரப்பை ஏற்படுத்திய 100 பேர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘சீரம்’ தடுப்பூசி மருந்து நிறுவனத் தலைமை நிர்வாகி ஆதர் பூனாவாலா இடம்பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பராதர், ஆசிய-பசிபிக் கொள்கை, திட்டப் பேரவையின் மஞ்சுஷா குல்கர்னி, ஹாலிவுட் தாரகை கேத் வின்ஸ்லெட் ஆகியோரும் நேற்று (செப் 15) பிரசுரமான பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

இவர்கள் இந்த ஆண்டில் அதிக கவனத்தை ஈர்த்திருப்பதன் காரணத்தை சிஎன்என் பத்திரிகையாளர் ஃபரீத் ஜக்கரியா விளக்கியிருக்கிறார்.

நரேந்திர மோடி (69): சுதந்திர நாடான இந்தியா தனது 74 ஆண்டுகளில் ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, நரேந்திர மோடி ஆகியோரை முக்கியத் தலைவர்களாகப் பெற்றிருக்கிறது. இதுவரை எந்தத் தலைவரும் செய்திராத வகையில் நாட்டின் அரசியலில் அவர் ஆதிக்கம் செலுத்துகிறார். நாட்டை மதச்சார்பின்மையிலிருந்து நகர்த்தி இந்து தேசியவாதம் பக்கம் திருப்பியிருக்கிறார். இந்தியச் சிறுபான்மைச் சமுதாயமான முஸ்லிம்களின் உரிமைகள் அரிக்கப்படுகின்றன. பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி, சிறையில் அடைக்கிறார்.

மம்தா பானர்ஜி (66): இந்திய அரசியலில் அச்சமின்மையின் முகமாகத் திகழ்கிறார். அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை தலைமையேற்று நடத்தவில்லை, கட்சியே அவர்தான். ஆணாதிக்க சமூகத்தில், வீதியில் இறங்கிப் போராடத் தயங்காத குணம்கொண்ட அவர் தனித்து விளங்குகிறார்.

ஆதர் பூனாவாலா (40): கோவிட் -19 பெருந்தொற்று ஏற்பட்ட காலத்திலிருந்தே உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, சவாலை எதிர்கொள்வதில் சளைக்காமல் பணியாற்றுகிறார். பெருந்தொற்று விடைபெற்றுவிடவில்லை, அதை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவர் இன்னமும் பெரும் பங்காற்ற முடியும். தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதில்லை.

தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பராதர்: அமைதியானவர், ரகசியமாகச் செயல்படுகிறவர், பொதுவெளியில் அபூர்வமாக வெளிப்படுகிறவர், பேட்டிகளை எப்போதாவதுதான் அளிப்பார். தாலிபான்களில் மிதவாதிகளை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேற்கத்திய நாடுகளின் ஆதரவையும் நிதி உதவியையும் பெற அவர் முன்னிலைப்படுத்தப்படுவார். அமெரிக்கர்களை வற்புறுத்தி வெளியேற வைத்த அவரால் அவருடைய நாட்டைச் சேர்ந்த பிற குழுவினரைத் தன் இயக்கத்தின்பார் ஈர்க்க முடியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா, ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி, இசையுலக தேவதை பிரிட்னி ஸ்பியர்ஸ், ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாகி டிம் குக், டைட்டானிக் திரைப்படப் புகழ் நடிகை கேத் வின்ஸ்லெட், உலக வர்த்தக நிறுவனத் தலைவராகியிருக்கும் முதல் ஆப்பிரிக்கப் பெண் கோஜி ஓகோன்ஜோ-வீலா ஆகியோரையும் ஆண்டின் செல்வாக்குள்ள பிரமுகர்களாக ‘டைம்’ பட்டியலிட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE