கரோனா குறித்து தவறான தகவல்கள் பரப்புவதில் இந்தியா முதலிடம்!

By காமதேனு டீம்

கரோனா பெருந்தொற்று நோய் தொடர்பாகவும் அதற்கான தடுப்பூசிகள் தொடர்பாகவும் தவறான தகவல்களை உலகமெங்கும் சமூக ஊடகங்கள் பரப்பின. அப்படி பரப்பிய 138 நாடுகளில் தவறான தகவல்களை அதிகம் பரப்பிய நாடு என்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா.

எலுமிச்சை சாறு குடித்தால் கரோனா வராது, கற்பூரம், ஏலக்காய் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும், கதிர்வீச்சு மூலம் கரோனா பரவுகிறது போன்ற ஆதாரமற்ற தவறான தகவல்கள் இந்தியாவில் பரப்பப்பட்டன.

கரோனா எங்கிருந்து பரவியது, எப்படிப் பரவியது, அதன் அறிகுறிகள் என்ன, அது யாரை பாதிக்கிறது, அதற்கு மருந்துகள் என்ன, அதன் விளைவுகள் என்ன என்று அனைத்து கோணங்களிலும் ஏராளமானோர் தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். நல்ல எண்ணத்தில் பகிர்ந்தவர்களும் உண்டு, பீதியைக் கிளப்பியவர்களும் உண்டு.

சர்வதேச நூலக சங்கங்களின் சம்மேளனமும் அந்த நிறுவனத்தின் பத்திரிகையும் இணைந்து நாடு வாரியாக ஆய்வு செய்தன. கரோனா பற்றி நிலவிய தவறான தகவல்கள், அதற்கு மூலகாரணங்கள் என்று தொகுத்து ஆய்வறிக்கையாக வெளியிட்டன.

138 நாடுகளிலிருந்து கிடைத்த 9,657 தகவல்கள் இதற்காக ஆராயப்பட்டது. 94 அமைப்புகள் அந்தத் தகவல்களைச் சரிபார்த்தன. கரோனா பற்றிய வெளியான சமூக ஊடகத் தகவல்களில் இந்தியாவில் 18.07 சதவீதத் தவறான தகவல்களாகவே இருந்தன. அமெரிக்கா 9.74 சதவீதம், பிரேசில் 8.57 சதவீதம் தவறான தகவல்களை பரப்பியதாக தெரிய வந்துள்ளது. தகவல்கள் எந்த அளவுக்கு அதிகம் தவறாக இருந்தனவோ நோயின் தீவிரமும் அந்த நாடுகளில் அதிகமாக இருப்பதை ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

சமூக ஊடகங்களில் கரோனா தொடர்பாகப் பரப்பப்படும் தவறான தகவல்கள், மக்களுடைய உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று உலக சுகாதார நிறுவனமும் ஆரம்பத்திலேயே எச்சரித்தது. எந்தத் தகவலையும் இருமுறை சரிபார்த்த பிறகே பொது வெளியில் வெளியிட வேண்டும் என்றும் அது மக்களைக் கேட்டுக்கொண்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE