ஜியாமென் நகரில் வேகமெடுக்கும் டெல்டா வைரஸ் பரவல்

By காமதேனு டீம்

சீனாவின் தென்கிழக்கு மாகாணமான புஜியானில் உள்ள ஜியாமென் நகரத்தில், கரோனா டெல்டா வைரஸ் வேகமாகப் பரவுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. நேற்று (செப்.13), 32 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது. இன்று (செப்.14) அந்த எண்ணிக்கை 59 ஆகியிருக்கிறது. இதையடுத்து, 45 லட்சம் பேர் வசிக்கும் இந்த நகரம் இன்று முதல் எல்லா வகைகளிலும் பிற நகரங்களிலிருந்து துண்டிக்கப்பட்டுவிட்டது.

இந்த நகரில் வசிப்போர் யாரும், அவசியமான காரணமின்றி வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று அரசு தடை விதித்திருக்கிறது. நகரில் உள்ள குடியிருப்புகள், சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் போக்குவரத்து முடக்கப்பட்டுவிட்டது. திரையரங்குகள், மதுபான விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நூலகங்கள் அனைத்தும் சேவைகளை நிறுத்திவிட்டன.

இரண்டு பள்ளிக்கூட மாணவர்களுக்கு வழக்கம்போல மருத்துவப் பரிசோதனை செய்தபோதுதான், டெல்டா வைரஸ் பரவுவது தெரிந்தது. அந்த மாணவர்களின் தந்தையர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு ஆகஸ்ட் மாத முன்பகுதியில் சீனா திரும்பினர். அவர்கள் மூலம் டெல்டா வைரஸ் பரவியிருக்கிறது என்று ஊகிக்கின்றனர்.

வூஹானில் 2019 டிசம்பரில் கோவிட் பெருந்தொற்று தோன்றியது. அங்கிருந்து சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் பரவியது. கோவிட்டை எதிர்த்து சீனா மிகப் பெரிய மருத்துவ இயக்கத்தைத் தொடங்கியது. கடந்த மாதம்தான் பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக சீன அரசு அறிவித்தது. டெல்டா வைரஸுக்கு எதிராக சீன அரசு இப்போது எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பார்த்தால், இதன் வேகமும் தீவிரமும் அதிகம் என்பது புலனாகிறது. விரைந்து பரவும் தன்மையில் இந்த வைரஸ் இருக்கிறது.

இதற்கிடையே, புஜியான் மாகாணத்தின் 3 நகரங்களில் டெல்டா வைரஸ் வேகமாகப் பரவியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 103 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்டா வைரஸ் பரவிய நகரங்களில் மழலையர் பள்ளிக்கூடங்கள், தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. மாணவர்கள் ஆன்-லைன் மூலம் படிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொலைதூரப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. நகரங்களின் எல்லாப் பகுதிகளிலும் காய்ச்சல் அறிகுறி பரிசோதனைகள் தொடங்கிவிட்டன. ‘நகரவாசிகள் அனைவருக்கும் சோதனைகள் நடைபெறும்’ என்று, ஜியாமென் நகர துணை மேயர் லியோ ஹுவாஷெங் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE