துப்பாக்கிக்கு அஞ்சாத ஆப்கானிய வீர நங்கை

By காமதேனு டீம்

பெண்களை மரியாதையாக நடத்துவோம், அவர்களுடைய உரிமைகளைப் பறிக்க மாட்டோம் என்றெல்லாம் தாலிபான்கள் தந்த வாக்குறுதிகள் வெறும் பேச்சுதான் என்பதை நிரூபிக்கும் நிகழ்வு, காபூலில் செவ்வாய்க்கிழமை அனைவரின் கண் எதிரிலே நடந்தது.

‘பெண்களின் உரிமைகளைப் பறிக்காதே, பாலினப் பாகுபாடு பார்க்காதே, தனிமனித சுதந்திரங்களில் தலையிடாதே‘ என்று கோஷமிட்டவர்களை ஒடுக்க, தாலிபான்கள் வானத்தில் துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர். அப்போது புர்கா அணிந்திருந்த ஒரு பெண் கோஷங்களை உரத்து எழுப்பினார். உடனே தாலிபான் ஒருவர், அவருடைய நெஞ்சை நோக்கி துப்பாக்கியால் குறிபார்த்தார். அப்போதும் கலக்கம் அடையாமல் அந்தப் பெண் கோஷமிட்டார். அவருக்கு அருகிலிருந்தவர்களும் பதற்றப்படாமல் தாலிபான்களை எதிர்கொண்டனர். காபூலில் பாகிஸ்தான் தூதரகம் அருகில் இந்தச் சம்பவம் நடந்தது. இதை ஒரு புகைப்படக்காரர் படமாக எடுத்து வெளியிட்டதும் அது வைரலானது.

சீனாவில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக, தியானென்மென் சதுக்கத்தில் கூடிய மாணவர்கள் மீது ராணுவம் நடவடிக்கை எடுத்தது. திரண்டுவந்த ராணுவ டாங்குகளைக் கண்டு அஞ்சாமல் தனியொருவனாக நின்ற சீன இளைஞனைப் போல, இந்தப் பெண்மணியும் காட்சி தருவதாகப் பலரும் குறிப்பிடுகிறார்கள்.

காபூல் உட்பட பல்வேறு நகரங்களிலும் மக்கள் நிராயுதபாணிகளாக ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவற்றை நடத்துகின்றனர். தாலிபான்களின் மிரட்டல், தாக்குதல்கள், கைதுகளுக்கு அவர்கள் அஞ்சவில்லை. இக்காட்சிகளைப் பதிவுசெய்யும் உள்நாட்டு, வெளிநாட்டுப் புகைப்படக்காரர்களையும் நிருபர்களையும் தாலிபான்கள் கடுமையாகத் தாக்குகின்றனர். கை, கால்களில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டும் பத்திரிகையாளர்கள் தங்களுடைய கடமையிலிருந்து பின்வாங்காமல், தொடர்ந்து செய்திகளையும் புகைப்படங்களையும் அனுப்பிவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE