கரோனாவைப் பரப்பியவருக்கு 5 ஆண்டுகள் சிறை!

By காமதேனு டீம்

வியட்நாமில், பெருந்தொற்று பரவக் காரணமாக இருந்ததாக 28 வயது இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

உலக அளவில் கரோனா பரவத் தொடங்கிய ஆரம்பகட்டத்தில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்ட வியட்நாம், ஏப்ரல் மாதம் முதல் கடும் பாதிப்புகளைச் சந்தித்தது.

குறிப்பாக, ஹோ சி மின் நகரத்தில் 2,60,000 பேர் பெருந்தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். இதுவரை அந்நகரில் மட்டும் 10,685 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்திருக்கின்றனர். இந்நிலையில், அந்நகரில் பணிபுரிந்துவந்த லே வான் ட்ரி எனும் நபர், கரோனா கட்டுப்பாடுகளை மீறி தனது சொந்த ஊர் இருக்கும் கா மாவ் மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டார். கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர், கட்டுப்பாடுகளை அலட்சியம் செய்து பயணம் செய்ததால் பலருக்கும் தொற்று ஏற்பட்டது என்றும், ஒருவர் உயிரிழந்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக கா மாவ் மாகாணத்தின் மக்கள் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. வியட்நாமில், இதற்கு முன்பும் இதே குற்றச்சாட்டின் பேரில் இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE