ஆப்கனைக் கைவிடுகிறதா இந்தியா?

By வெ.சந்திரமோகன்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி அதிகாரபூர்வமாக அமையும் தருணம் இது. 2-து முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வரும் தாலிபான்கள், ஆப்கானியக் குடிமக்களை எப்படி நடத்துவார்கள் என்று உலகமே உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது. அதேவேளையில், தாலிபான்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் பரிதவிப்புடன் காத்திருக்கும் ஆப்கானியர்களை, இந்தியா எப்படி அரவணைக்கப்போகிறது எனும் கேள்வியும் முக்கியத்துவம் பெறுகிறது.

பரிதவிக்கும் ஆப்கானியர்கள்

20 ஆண்டுகளாக ஆப்கன் மண்ணில் இருந்த அமெரிக்க ராணுவம், முற்றிலுமாக அங்கிருந்து வெளியேறிவிட்டது. ஆனால், தான் வாக்களித்திருந்தபடி, தனக்காகப் பணிபுரிந்த ஆப்கானியர்கள், அப்பாவிப் பொதுமக்களைக் காக்கும் பொறுப்பை அமெரிக்க அரசு முறையாக நிறைவேற்றவில்லை. அமெரிக்காவின் க்ரீன் கார்டு வைத்திருந்த ஆப்கானியர்கள்கூட, அமெரிக்கா தங்களைக் கைகழுவிவிட்டுச் சென்றுவிட்டதாகப் புலம்பித் தவிக்கிறார்கள். இந்நிலையில், ஆப்கனின் உறுதுணையான நண்பனாகக் கருதப்படும் இந்தியா, இவ்விஷயத்தில் உறுதியான நிலைப்பாடு எதையும் எடுக்காததும் முக்கியத்துவம் பெறுகிறது.

தாலிபான்களின் ஆட்சியில் தங்களுக்குச் சுதந்திரம் இருக்காது என்று ஆப்கானியர்கள் பலர் அஞ்சிவரும் நிலையில், அவர்களை இந்தியாவுக்கு அழைத்துவருவதற்கு இந்திய அரசுத் தரப்பில் அதிக அக்கறை காட்டப்படவில்லை எனும் விமர்சனம் எழுந்திருக்கிறது. ஆப்கன் மண்ணில் இந்தியாவின் திட்டங்களுக்காகப் பணிபுரிந்த ஆப்கன் ஊழியர்கள், தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறியிருக்கின்றனர். இந்தியர்களைத் திரும்ப அழைத்துவருவதில் காட்டும் கவனத்தை, விசா கோரி விண்ணப்பிக்கும் ஆப்கானியர்கள் விஷயத்தில் இந்தியா காட்டவில்லை.

ஆப்கன் – இந்திய உறவு

கலாச்சார ரீதியிலும் ஆப்கானியர்கள் இந்தியாவுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டவர்கள். கல்வி பயிலவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் அவர்கள் விமானம் ஏறுவது இந்தியாவுக்குத்தான். ஆப்கானிஸ்தானின் உட்கட்டமைப்புப் பணிகளில் இந்தியாவின் பங்கு மிகப் பெரியது. குடிநீர் வசதி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு என பல்வேறு அம்சங்களில் ஆப்கனுக்கு உதவியிருக்கிறது இந்தியா. 2001-ல் தாலிபான்களின் ஆட்சி அமெரிக்காவால் அகற்றப்பட்ட பின்னர், போர்களால் சின்னாபின்னமாகியிருந்த ஆப்கனை மறுகட்டமைப்பதில் இந்தியாவின் பங்களிப்பு கணிசமானது. இதுவரை, கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர் மதிப்பில் ஆப்கனில் இந்தியா முதலீடு செய்திருக்கிறது. அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவும் தன் பங்குக்கு ஆப்கன் ராணுவத்துக்குப் பயிற்சியளித்திருக்கிறது.

இறுதி கணம்வரை ஆப்கன் அரசுக்கு இந்தியா உறுதுணையாகவே இருந்தது. எனினும், தாலிபான்கள் ஆப்கனை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு முன்பு நடந்த முக்கியப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இந்தியாவுக்கு அதில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலையில், ஆப்கானியர்களின் நலனைப் பாதுகாக்க, தாலிபான்களுடன் இந்தியா ராஜீய ரீதியிலான உறவைப் பேண வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பாதுகாப்புப் பிரச்சினை

“ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் விஷயங்கள் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. எனவே, அந்நிகழ்வுகளை இந்தியா உன்னிப்பாகக் கவனித்துவருகிறது” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார். நீர், நிலம், ஆகாயம் என எந்த வழியாக ஆபத்து வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதிபடக் கூறியிருக்கிறார்.

மறுபுறம், இந்தியாவுடனான உறவைப் பேண விரும்புவதாகத் தாலிபான்களின் அரசியல் பிரிவின் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் கூறியிருக்கிறார். புதிதாக அமையவிருக்கும் தாலிபான் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராகும் அவர், “அண்டை நாடுகளுக்குத் தாலிபான்கள் ஒருபோதும் தொந்தரவாக இருந்ததில்லை என்றும், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் மட்டுமல்ல உலக நாடுகளுடனும் இணக்கமான உறவைப் பேணவே தாலிபான்கள் விரும்புகின்றனர்” என்றும் கூறியிருக்கிறார்.

தாலிபான்களின் வளர்ச்சியில் பெரும் பங்கை வகிக்கும் பாகிஸ்தான், இனி தாலிபான்களுடன் இணைந்து இந்தியாவுக்குத் தொல்லை கொடுக்கலாம் எனும் ஊகங்கள் எழுந்திருக்கும் நிலையில், ஷேர் முகமது அப்பாஸின் இந்த வார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினைகளில், தாலிபான்கள் மூக்கை நுழைக்க மாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதமாக இதைக் கருத முடியுமா என்பதை இப்போதைக்கு உறுதியாகச் சொல்லிவிட முடியாது. காரணம், ‘எப்படிப் பிற நாடுகளின் விஷயத்தில் தாலிபான்களின் தலையீடு இருக்காதோ, அதேபோல தாலிபான்களின் விஷயத்திலும் பிற நாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது’ என்று தாலிபான் அமைப்பின் இன்னொரு முக்கியத் தலைவரான அனா ஹக்கானி கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கும் தாலிபான்களின் ஹக்கானி குழுவுக்கும் இடையில் நீண்டகால உறவு உண்டு. இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்குத் தாலிபான்களால் பிரச்சினை ஏற்படாது என்று கூறும் தாலிபான்கள், இன்னொரு புறம், காஷ்மீர் உட்பட உலகின் எந்தப் பகுதியிலும் முஸ்லிம்களுக்காகக் குரல் எழுப்புவது தங்கள் உரிமை என்றும் கூறியிருக்கிறார்கள். காஷ்மீர் விவகாரத்தில் தாலிபான்கள் தலையிட மாட்டார்கள் என அனா ஹக்கானி கூறியிருக்கிறார். இன்னொருபுறம், பாகிஸ்தான் தங்களது 2-வது வீடு என்றும் தாலிபான்கள் கூறியிருக்கிறார்கள். இப்படி, மிகவும் நுட்பமான சிக்கல்களை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதேசமயம், இதைப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையாக மட்டும் கருதிவிட முடியாது.

ராஜீய ரீதியிலான நடவடிக்கைகள்

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறிவிட்டதை அடுத்து, அங்கிருக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உயரதிகாரிகள் அடங்கிய குழு துரிதமாக ஈடுபட்டிருக்கிறது.

ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டனிக்ஸாயுடன், கத்தாருக்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டல் தோஹாவில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுடன், ஆப்கனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களையும், ஆப்கன் மக்கள், குறிப்பாக சிறுபான்மையினரை இந்தியாவுக்கு அழைத்துவருவது குறித்துப் பேசப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சமீபகாலங்களில், ஆப்கனுக்கு வெளியே இந்திய அதிகாரிகள் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தாலும் இந்தச் சந்திப்பைத்தான் இந்தியா முறைப்படி அறிவித்தது. இந்தச் சந்திப்பு நடக்க வேண்டும் எனும் கோரிக்கை தாலிபான்களிடமிருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு மாத காலத்துக்கு ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பில் இந்தியா இருந்த நிலையில், ஆப்கன் விவகாரம் தொடர்பான கூட்டம் நடந்துமுடிந்திருப்பது கவனிக்கத்தக்கது. அதில், “எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்துவதற்கோ, தாக்குதல் நடத்துவதற்கோ ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக்கூடாது. ஆப்கனில் பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிக்கக் கூடாது” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. எனினும், தாலிபான்களின் செயல்பாடுகளின் விளைவுகளுக்கு அவர்களைப் பொறுப்பாக்கும் வகையில் காத்திரமான தீர்மானங்கள் அதில் இடம்பெறவில்லை. சீனாவும், ரஷ்யாவும் கொடுத்த அழுத்தமும் ஒரு நீர்த்துப்போன தீர்மானத்துக்குத்தான் வழிவகுத்திருக்கிறது.

இந்தியா கைவிடக் கூடாது

அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஆப்கனில் அதன் நோக்கம் வேறு. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் அரசியல் ஆதாயங்களும் வேறு வகையிலானவை. ஆனால், ஆப்கன் மண்ணுடன் வரலாற்றுத் தொடர்பு கொண்ட இந்தியா, ஆப்கன் மக்களை அப்படி எளிதாகக் கைவிட்டுவிட முடியாது. தாலிபான்களின் எளிய இலக்காகும் சுதந்திரச் சிந்தனையாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோருக்காவது உடனடியாக இந்தியா அடைக்கலம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.

செப்டம்பர் 25-ல், ஐநா சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றவிருக்கிறார். இந்நிலையில், ஆப்கன் நிலவரம் குறித்து அதில் ஆக்கபூர்வமான கருத்துகளை அவர் தெரிவிப்பாரா என்பதே, இப்போது உலக நாடுகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருக்கிறது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE