நெருங்கும் இறுதிக்கெடு

By வெ.சந்திரமோகன்

ஆப்கானிஸ்தானைத் தங்கள் ஆளுகையின்கீழ் கொண்டுவந்துவிட்ட தாலிபான்களின் ஒவ்வொரு நகர்வையும் உலக நாடுகள் அச்சத்துடன் கவனித்துக்கொண்டிருக்கின்றன. ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற இறுதிக்கெடு ஆகஸ்ட் 31 என்று நிர்ணயிக்கப்பட்டுவிட்ட நிலையில், அங்கிருந்து தங்கள் நாட்டினரை மீட்டுக் கொண்டுவர எல்லா நாடுகளும் துரிதமாகச் செயல்பட்டுவருகின்றன. கடந்த 10 நாட்களில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 58 ஆயிரம் பேர் விமானம் மூலம் திரும்ப அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் அங்கிருந்து வெளிநாட்டினர் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றும் வகையில் இறுதிக்கெடு தேதி நீட்டிக்கப்படுமா எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

சர்வதேச அங்கீகாரத்துக்காக மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாகத் தாலிபான்களின் மேல்மட்டத் தலைவர்கள் பாவனை செய்கிறார்கள் என்றே உலக நாடுகள் கருதுகின்றன. உண்மையில், துப்பாக்கி ஏந்தி நிற்கும் தாலிபான்களின் விருப்பத்துக்கு எதிராக முக்கிய முடிவுகளை மேல்மட்டத் தலைவர்களால் எடுத்துவிட முடியாது என்பதே நிதர்சனம்.

இதுதொடர்பாக தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து கடும் அழுத்தம் தரப்படுகிறது. ஆகஸ்ட் 24-ல் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய ‘ஜி7’ கூட்டமைப்பு சார்பில் நடந்த இணையவழிக் கூட்டத்தில் அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியிருக்கிறார். எனினும், அந்தக் கூட்டத்தில் பேசிய பைடன் அதுகுறித்து எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லை.

ஆகஸ்ட் 31-க்குள் வெளிநாட்டினர் அனைவரையும் ஆப்கனிலிருந்து வெளியேற்றுவது அசாத்தியமான விஷயம் என்றே அமெரிக்க அதிகாரிகள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. இதற்கிடையே இறுதிக்கெடுவை நீட்டிக்கும் வாய்ப்பு இல்லை என்று தாலிபான்கள் பிடிவாதம் காட்டுகின்றனர். கூடவே, கெடுவைத் தாண்டி ஆப்கன் மண்ணில் இருக்கும் படைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அச்சுறுத்தியிருக்கின்றனர்.

காபூலில் தாலிபான் தலைவர் அப்துல் கனி பராதரை சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் சந்தித்துப் பேசியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் என்னென்ன விஷயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

ஒருவேளை, பேச்சுவார்த்தையில் இறுதிக்கெடுவை நீட்டிக்க தாலிபான்கள் ஒப்புக்கொண்டாலும், எத்தனை நாட்களுக்குக் கெடு நீட்டிக்கப்படும் என்பதும் விவாதத்துக்குரிய விஷயம். மிகச் சில நாட்களே அவகாசமாகக் கிடைத்தால் மிச்சம் இருக்கும் வெளிநாட்டினரை வெளியேற்ற முடியாது என்றே உறுதியாகச் சொல்கிறார்கள் அமெரிக்க அதிகாரிகள்,

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையிலிருந்து தாலிபான்கள் மாறிவிடவில்லை என்றே அங்கிருக்கும் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாலிபான்களின் துப்பாக்கி முனையிலிருந்து பெரும்பாடுபட்டு தப்பிவந்த ஆப்கானியர்கள், குறிப்பாகப் பெண்கள் சொல்லும் கண்ணீர்க் கதைகள் கலக்கம் தருகின்றன. இந்தியாவுக்குத் தப்பிவந்த ஆப்கானியர்கள் பலர் ஊடகங்களுக்கு அளித்துவரும் நேர்காணல்களில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. “தாலிபான்கள் என்றே யார் என்றே அறிந்திராத என் குழந்தைகள், துப்பாக்கியுடன் நிற்கும் தாலிபான்களைப் பார்த்து அச்சமும் குழப்பமும் அடைந்து ‘இவர்கள் யார்?’ என்று என்னிடம் கேட்டனர்” என்று ஆப்கனிலிருந்து தப்பிவந்த பெண் ஒருவர் கூறியிருக்கிறார். ஆப்கனிலிருந்து வெளியேற முடியாத சூழலில் இருக்கும் பெண்களில் பலர் இந்த நெருக்கடிகளுக்கு இடையிலும் எதற்கும் அஞ்சாமல் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவருகிறார்கள்.

பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் என வெளிநாட்டினர் ஆப்கன் மண்ணில் சுதந்திரமாகச் செயல்பட முடியாது எனும் நிலை உருவாகியிருக்கிறது. தன்பாலின உறவாளர்கள், கலைஞர்கள், சாமானியர்கள் என ஆப்கானியர்களும் ஆபத்தான சூழலில்தான் இருக்கிறார்கள். எனவே, தாலிபான்களின் பிடியிலிருந்து எப்படியாவது தப்பிச்சென்றுவிட வேண்டும் என்றே பலரும் விரும்புகிறார்கள்.

தாலிபான்களில் பல்வேறு பிரிவுகள் உண்டு. சிராஜுதீன் ஹக்கானி தலைமையிலான பிரிவுக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சர்வதேச அங்கீகாரத்துக்காக மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாகத் தாலிபான்களின் மேல்மட்டத் தலைவர்கள் பாவனை செய்கிறார்கள் என்றே உலக நாடுகள் கருதுகின்றன. உண்மையில், துப்பாக்கி ஏந்தி நிற்கும் தாலிபான்களின் விருப்பத்துக்கு எதிராக முக்கிய முடிவுகளை மேல்மட்டத் தலைவர்களால் எடுத்துவிட முடியாது என்பதே நிதர்சனம்.

உலக நாடுகள் ஒருபக்கம் தங்கள் குடிமக்களை மீட்டுக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் நிலையில், ஆப்கனில் தாலிபான் அச்சுறுத்தலுக்கு நடுவில் தவித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு உதவிகள் வழங்கும் பணிகளை மிகுந்த சிரமத்துக்கு நடுவில் தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டுவருகின்றன. ஆப்கனுக்கான நிவாரணப் பொருட்கள் இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டுமே கையிருப்பில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE