ரோம்: இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் இத்தாலி மொழியில் மெலோனி வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், “தேர்தல் வெற்றிக்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்தியா - இத்தாலி நாடுகளுக்கு இடையேயான நட்பை வலுப்படுத்தும் விதமாக இருநாடுகளும் இணைந்து செயல்படும். நம் தேசங்களின், நம் மக்களின் நலனுக்கான பல்வேறு விஷயங்களிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணப்பட்டன. அதில் பாஜக 240 இடங்களிலும் என்டிஏ கூட்டணி 293 இடங்களிலும் வென்றிருந்தன. அதேபோல் காங்கிரஸ் 99 இடங்களிலும், இண்டியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதனிடையே ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக புதன்கிழமை முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகின்றது. இச்சூழலில் இத்தாலி பிரதமர் தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்.
வைரலான செல்ஃபி: ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் நடந்த ஐ.நா.,வின் பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி உலகத் தலைவர்களை சந்தித்து பேசினார். அந்த வகையில் மாநாட்டில் பங்கேற்ற, இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனியையும் பிரதமர் சந்தித்தார். பிரதமர் மோடி அவருடன் செல்பி படம் எடுத்துக் கொண்டார்.
» மெக்சிகோவின் முதல் பெண் அதிபராகிறார் கிளாடியா
» நிதி முறைகேடு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு
இந்தப் படத்தை, தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட மெலோனி, ‘பருவநிலை மாறுபாடு மாநாட்டில் சிறந்த நண்பருடன்’ எனக் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இருவரின் பெயரையும் குறிக்கும் வகையில், ‘மெலோடி’ என்ற வார்த்தையையும் அவர் பயன்படுத்தினார். அந்த செல்ஃபி வைரலானது நினைவுகூரத்தக்கது.