பல்லவி அய்யர், தி இந்து ஆங்கிலம்
வளர்ந்த நாடுகளில் ஒன்றான ஜப்பான், வெளிநாடுகளிலிருந்து வரும் தொழிலாளர்களை வரவேற்பதில்லை. தனித் திறன்வாய்ந்த பணியாளர்கள் (Skilled labourers) மட்டுமே ஜப்பானுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். திறன்கள் எதுவும் தேவைப்படாத அல்லது ஓரளவு மட்டுமே திறன் தேவைப்படும் வேலைகளைச் செய்வோரை (Un-skilled & Semi-skilled) ஜப்பான் தனது நாட்டுக்குள் வேலைக்கு அனுமதிப்பதில்லை. அப்படியான தொழிலாளர்கள் சுற்றுலாப் பயணியாக மட்டுமே ஜப்பானுக்குச் செல்லமுடியுமே தவிர அங்கு நீண்ட காலம் தங்க முடியாது.
ஆனால், இப்போது அங்கே நிலமை மாறியிருக்கிறது. குறைந்துவரும் பிறப்பு விகிதம் மற்றும் அதிகரித்துவரும் முதியோர் எண்ணிக்கை ஆகியவற்றால் ஜப்பானில் பல்வேறு பணிகளுக்கு ஆள்பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது. எனவே, அந்நியர்களை அனுமதிக்கும் வகையில் விதிகளைத் தளர்த்தும் முயற்சிகள் அங்கே தொடங்கப்பட்டுள்ளன.
தனித் திறன் அல்லது சிறப்புத் திறன் எதுவும் தேவைப்படாத வேலை பார்க்கக்கூடிய வெளிநாட்டவர்களை அனுமதிப்பதற்கான மசோதாவுக்கு ஜப்பானிய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஜப்பானுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.