ஆபத்தின் விளிம்பில் அசியா பீபி!

By காமதேனு

நந்து

இறை நிந்தனைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த அசியா பீபி தற் போது அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள இட்டன் வாலி என்ற கிராமத்தில் வசித்த கிறிஸ்தவ பெண் அசியா நூரீன் நான்கு குழந்தைகளுக்குத் தாய். அசியா பீபி என்றும் அவர் அழைக்கப்படுகிறார். 2009-ல், அண்டை வீட்டுப் பெண்களுடன் ஏற்பட்ட தகராறில் இஸ்லாமியப் பெண் ஒருவர் கொண்டுவந்த தண்ணீர் குவளையைத் தொட்டுவிட்டார் அசியா. இது இஸ்லாமிய மத விதிமுறை மீறல் என்று எதிர் தரப்பினர் குற்றம் சாட்டினர். மேலும், இந்தத் தகராறின் போது அசியா இறைத் தூதர் முகமது நபி பற்றி அவதூறாகப் பேசிவிட்டார் என்றும் அண்டைவீட்டுப் பெண்கள் குற்றம் சாட்டினர்.

இறை நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அசியாவுக்கு நவம்பர் 2010-ல் ஷேக்புரா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இச்சட்டத்தில் தண்டனை பெற்ற முதல் பெண் இவர்தான். தன் மீதான இறை நிந்தனைக் குற்றச்சாட்டை மறுத்துவந்த அசியா, மேல் முறையீடு செய்தார். எட்டு ஆண்டுகள் தனிமைச் சிறையில் வாடினார். இந்த நிலையில் இப்போது, குற்றச்சாட்டை அரசுத் தரப்பு ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை என்று சொல்லி அசியாவை விடுவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE