பத்திரிகையாளர் ஜமால் கஷோகி எங்கே?

By காமதேனு

அதிகாரத்தில் இருப்பவர்களை, அவர்களுக்கு நெருக்கமானவர்களை சமரசமின்றி எதிர்த்த பத்திரிகையாளர்கள் ஆட்சியாளர்களின் மறைமுக ஒப்புதலுடனும் ஆதரவுடனும் அழிக்கப்பட்ட சம்பவங்கள் உலகெங்கும் ஏராளம். அண்மையில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்குச் சென்ற பத்திரிகையாளருக்கு நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் விஷயம் இதுவரை யாரும் கேள்விப்படாதது. ஒருவேளை இது உண்மையாக இருந்தால் பெரும் அதிர்ச்சி அளிப்பதும்கூட!

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி தொடர்ந்து சவுதி அரசை விமர்சித்ததால் அங்கிருந்து வெளியேறி அமெரிக்காவில் வசித்துவருகிறார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவரும் அவரை ட்விட்டரில் 16 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அக்டோபர் 2 அன்று கஷோகி, துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகம் சென்றார். துருக்கியைச் சேர்ந்த ஹாடிஸ் செங்கிஸ் என்ற பெண்ணை அவர் திருமணம் செய்துகொள்ளப் போகிறார். எனவே, சவுதியில் அவரது முன்னாள் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டதற்கான அதிகாரபூர்வ ஆவணங்களைப் பெறுவதற்காகவே தூதரகம் சென்றிருக்கிறார்.

ஆனால், அங்கு சென்றவர் வெளியேறியதற்கான எந்தத் தடயமும் இல்லை. எங்கே போனார், அவருக்கு என்ன ஆனது என்ற தெரியவில்லை. கஷோகி, சவுதி தூதரகத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார் என்று துருக்கி போலீஸ் சந்தேகம் எழுப்பியது. கஷோகி தூதரகரத்துக்குச் செல்வதற்கு சில மணி நேரங்கள் முன்பாக சவுதியிலிருந்து வந்த 15 பேர் கொண்ட குழு இஸ்தான்புல் தூதரகம் வந்து சேர்ந்தது. அவர்கள்தான் கஷோகியைக் கொன்று சடலத்தை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும் என்று துருக்கி போலீஸார் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதை துருக்கி அரசு சவுதி அரச குடும்பத்தின் மீதான குற்றச்சாட்டாக முன்வைக்கிறது. சவுதி அரசின் ஒப்புதலுடன்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது என்று துருக்கி அரசின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், சவுதி அரசு இதை மறுத்துள்ளது. பத்திரிகையாளர் கஷோகி தூதரகத்தின் மற்றொரு வாயில் வழியாக வெளியே சென்றுவிட்டார் என்று கூறுகிறது. ஆனால், அவர் உள்ளே நுழைந்ததற்கான சிசிடிவி வீடியோ ஆதாரம் இருக்கிறது. வெளியே சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை. தூதரகத்திலிருந்து கஷோகி வெளியேறிவிட்டார் என்பதை சவுதி அரசு நிரூபிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன். இதையடுத்து தனது தூதரகத்தில் துருக்கி அரசு அதிகாரிகள் சோதனை நடத்த அனுமதி அளித்துள்ளது. விரைவில் துருக்கி அரசின் விசாரணை அதிகாரிகளும் தூதரகத்தில் சோதனை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE