ஆட்டம் காட்டும் அதிபர் ட்ரம்ப்!

By காமதேனு

இன்று உலகின் பல நாடுகள் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி பெரும் பிரச்சினைகளைச் சந்தித்துவருகின்றன. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகள்தான். சர்வதேச அளவில் பொருளாதாரச் சந்தை பின்னடைவைச் சந்திப்பதற்கு இவர் முழுமுதற் காரணியாகிவிட்டார்!

ஜனவரி 2017-ல், அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற திலிருந்தே இவரது ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. உலக அளவில் குடியேற்றத்தை பெரும் குற்றமாக மாற்றியது இவருடைய அறிவிப்புகள்தான். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது மட்டுமே என்று அறிவித்தது, ஹெச் 1 பி விசா விவகாரம் என அடுத்தடுத்து சர்ச்சைகளைக் கிளப்பினார். மேலும், உலக நாடுகளோடு வெவ்வேறு விதங்களில் மல்லுக்கட்டி நிற்கிறார். தன் தனிப்பட்ட விவகாரங்களைக்கூட சர்வதேசப் பிரச்சினையாக மாற்றி தேவையற்ற சிக்கல்களை உருவாக்கிக் கொண்டே வருகிறார் ட்ரம்ப். ரஷ்யாவுடனான விரோதப் போக்கையும் இவர் விடுவதாயில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ரஷ்யாவைத் தாக்குவதிலேயே குறியாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த ட்ரம்ப் - புதின் சந்திப்பு உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் ரஷ்யா மீது பொருளாதார தடையை அறிவித்தார் ட்ரம்ப். சிரியா உள்நாட்டுப் போரில் ரஷ்யாவுக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்களை ஆதரித்துவரும் போக்கையும் இவர் மேலும் தீவிரமாக்கி வருகிறார்.

எண்ணெய் உற்பத்தி நாடுகளில் முன்னணி நாடான ஈரானுடன் தேவையற்ற அரசியல் சண்டைகளைத் தொடுத்து ஈரான் மீது பொருளாதார தடையை அறிவித்
தார் ட்ரம்ப். இதனால், இன்று சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சந்தையில் மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளார். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்
திலிருந்தும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா விலகியது. அத்தோடும் நிறுத்தாமல், “அமெரிக்காவைப் பகைத்துக்கொண்டால் வரலாற்றில் இதற்குமுன் நிகழாத அளவுக்குக் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என்று ஈரானுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார் ட்ரம்ப். இதுபோன்ற நடவடிக்கையால் ஈரான் கரன்சியான ரியால், வரலாற்றில் இல்லாத அளவுக்குக் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

ஆனானப்பட்ட சீனாவையும் விட்டுவைக்கவில்லை ட்ரம்ப். அதன் மீதும் பொருளாதார தடையை அறிவித்துள்ளார். உலகில் பல்வேறு நாடுகளின் வர்த்தகச் சந்தையில் சீனா தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது. பல அமெரிக்க நிறுவனங்களே சீனாவைத்தான் நம்பியிருக்கின்றன. இந்த நிலையில், சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார தடையும் சர்வதேச சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE