ஹாலிவுட் இன்னும் முன்னேறவே இல்லீங்கோ..!

By காமதேனு

ஹாலிவுட் பதினோறு வருடங்களாக எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என்கிறது ஒரு ஆய்வு.

சினிமாப் பேச்சை எடுத்தாலே உலகத் தரத்துக்கும் ஹாலிவுட் தரத்துக்கும் இருக்க வேண்டும் என்றுதான் பெரும்பாலும் சினிமா ஆர்வலர்கள் பேசுவதுண்டு. ஆனால், ஹாலிவுட் சினிமாத்துறையே பல வருடங்களாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடங்கிவிட்டதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஹாலிவுட் இயக்குநர்கள், நடிகர்கள் மீது பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் இந்த ஆய்வு மேலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

“சினிமாத்துறையில் மாற்றங்கள் குறித்தும், பன்முகத்தன்மை குறித்தும் விவாதம் எழும்போதெல்லாம் ஹாலிவுட் பிரபலங்களும் இயக்குநர்களும் நன்றாகப் பேசுகிறார்கள். ஆனால், செயலில் காட்டுவதில்லை” என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் ஸ்டாசி எல் ஸ்மித்.

தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அனென்பர்க் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் அண்ட் கம்யூனிகேஷனில் பேராசிரியராக இருக்கிறார் ஸ்டாசி. இவர் 2007 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் ஓவ்வொரு ஆண்டும் வெளியான ஹாலிவுட் படங்களில் டாப் 100 படங்களை எடுத்து ஆய்வு செய்துள்ளார். அவற்றில் வசனம் பேசும் பெண் கதாபாத்திரங்களின் விகிதம் இந்தப் பதினோறு ஆண்டுகளில் மாறவே இல்லை. 2007-லிருந்து அதே 31 சதவீதமாகத்தான் இருக்கிறது. அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த பெண் கதாபாத்திரங்கள் என்று பார்த்தால் இன்னும் குறைவு. மேலும் நிற அடிப்படையில் பார்க்கும்போது வெள்ளை நிறமுடைய நடிகர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். பிற நிறத்தவர்களுக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன என்பதும் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE