விடுதலை விடிவெள்ளியின் நூறாண்டுகள்

By காமதேனு

அடக்குமுறையும் போராட்டங்களும் நிற்கப் போவதில்லை. அப்போதெல்லாம் விடுதலையை நோக்கிய நகர்வுகளுக்கு உந்துதலாக ஒரு சிலர் இருப்பார்கள். அவர்களிடம் நிச்சயம் மண்டேலாவின் தாக்கம் இருக்கும்.

தென்னாப்பிரிக்கா காலனியாதிக்கத்தில் சிக்கிக்கொண்டிருந்தபோது கறுப்பினத்தவர்களின் விடுதலைக்காகப் போராடியவர் மண்டேலா. மக்களுக்காகப் போராடியதற்காக 27 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தவர். அடக்குமுறை, போராட்டம், விடுதலை என்றாலே யாருக்கும் மனதில் சட்டெனத் தோன்றும் நெல்சன் மண்டேலாவின் நூறாவது பிறந்த நாள் சமீபத்தில் கடந்தது.

இந்த நேரத்தில் நெல்சன் மண்டேலாவை நினைவுகூர வேண்டியது அவசியமா என்றால் அவசியம்தான். இப்போது காலனியாதிக்கம் இல்லாவிட்டாலும் இனம், மதம், மொழி, சாதி அடிப்படையிலான அடக்குமுறைகள் தொடர்கின்றன. அடக்குமுறையிலிருந்து மீண்டு விடுதலை நோக்கி நகர்வதற்குக் கற்றுக்கொடுத்த மிகச்சில உதாரணங்களில் ஒருவராக மண்டேலா இருக்கிறார் என்பதே காரணம்.
சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையின்போது அவர் பேசிய உரை அடிமைத்தனத்தின் விடுதலை வரலாற்றில் மிக முக்கியமானது. தென்னாப்பிரிக்காவில் அவர் முன்னெடுத்த போராட்டங்கள், பிற நாட்டவர்களாலும் கம்யூனிஸ்ட்டுகளாலும் தூண்டப்பட்டது என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதை மறுத்த மண்டேலா, தான் ஒரு ஆப்பிரிக்கன் என்பதால்தான் உந்தப்பட்டு என் மக்களுக்காகப் போராடுகிறேன் என்றார். தனது மூதாதையர்கள் தங்களது நிலங்களைக் காப்பாற்றப் போராடிய கதைகளையெல்லாம் கேட்டு வளர்ந்ததுதான் காரணம் என்றார்.

காந்தியப் பார்வையை அவர் கொண்டிருந்தாலும் ஒருகட்டத்துக்குமேல் விடுதலைக்கான போராட்டங்களில் வன்முறை தவிர்க்க முடியாததாகிறது என்று சொன்ன மண்டேலா, ‘நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான்’ என்பதை உள்வாங்கி, ‘உம்கோண்டோ’ என்ற ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் படையைத் தோற்றுவித்தார். அதைப் பகிரங்கமாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளவும் செய்தார். சட்டத்தை எந்தளவுக்கு மதித்து நடந்தாரோ அந்த அளவுக்கு மீறவும் தயாரானார். ஆனாலும், போர் மூள்வதை ஒருபோதும் அவர் விரும்பவில்லை. அதைத் தவிர்க்கவே பெரிதும் முயன்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE