ஜெர்மன் பிரதமராகத் தொடர்ந்து நான்காவது முறையாக ஏஞ்சலா மெர்க்கல் பதவியேற்றிருப்பது ஐரோப்பாவைத் தாண்டியும் மகத்தான சாதனைதான்!
செப்டம்பரில் நடந்த தேர்தலில் மெர்க்கலின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி வென்றாலும் நாடாளுமன்றத்தில் அதன் பலம் கணிசமாகக் குறைந்தது. இதனால் சமூக ஜனநாயகக் கட்சியுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து சில அமைச்சர் பதவிகளையும் வழங்கியதன் மூலம்தான் அவர் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 364 வாக்குகளும் எதிராக 315 வாக்குகளும் பதிவாகின. இதிலேயே மெர்க்கலுக்கு இந்த ஆட்சியைத் தக்கவைப்பது எப்படிப்பட்ட சவலாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் சமரசப் போக்குக்கும் நடைமுறை சார்ந்த அணுகுமுறைக்கும் பெயர் போனவரான மெர்க்கல் இன்னொரு நான்காண்டு ஆட்சிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துவிடுவார் என்றே சொல்லப்படுகிறது.
1954-ல் பிறந்த மெர்க்கல் 1989-ல் கிழக்கு -மேற்கு ஜெர்மனியின் இணைப்புக்கு முந்தைய இடைக்கால அரசின் செய்தித்தொடர்பாளர் ஆனார். 1990-ல் இணைப்புக்குப் பின் தேர்தலில் வென்றவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஆனார்.