கடித்த பாம்பை கொன்று எடுத்துக்கொண்டு சிகிச்சைக்கு வந்த கரூர் விவசாயி

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கடித்த பாம்பை அடித்துக் கொன்று எடுத்துக்கொண்டு விவசாயி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைக்கு சேர்ந்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (50). இவர் விவசாயம் மற்றும் பூ வியாபாரம் செய்து வருகிறார். பூக்கட்டுவதற்காக வாழை சருகு கட்டுகளை வாங்கி வீட்டில் அடுக்கி வைத்திருந்தார். இன்று (நவ. 20ம் தேதி) காலை பூக்கட்டுவதற்காக வீட்டிலிருந்து சருகு கட்டை எடுத்தபோது அதில் மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பு மாணிக்கத்தின் கையில் கடித்துள்ளது.

2 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை அடித்து கொன்ற மாணிக்கம், கொன்ற பாம்பை பையில் போட்டு எடுத்துக் கொண்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தார். பாம்புடன் வந்த மாணிக்கத்தை கண்டு நோயாளிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், பாம்பு உயிருடன் இல்லை என்பதை அறிந்து நிம்மதி அடைந்தனர். மாணிக்கத்திற்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE