ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு மாணவர்கள் அளித்த வித்தியாசமான பிரியாவிடை: வீடியோ வைரல்

By KU BUREAU

வாரங்கல்: தெலங்கானாவில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருக்கு அவரது மாணவர்கள் அளித்த பிரியாவிடை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தங்களுக்குப் பிடித்த ஆசிரியர் பணியிட மாறுதல் அல்லது ஓய்வு பெற்றால், மாணவர்கள் அந்த ஆசிரியரிடம் கண்ணீருடன் விடை கொடுப்பார்கள். சமூக ஊடகங்களில் இதுபோன்ற உணர்ச்சிபூர்வமான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது, ​​ஓய்வு பெற்ற தங்களது அன்புக்குரிய ஆசிரியருக்கு மாணவர்கள் பிரம்மாண்டமான பிரியாவிடை வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் துகோண்டியில் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பணியாற்றிய ஜனார்த்தன் என்ற இந்தி ஆசிரியர், மாணவர்களுக்குப் பிடித்தமான வகையில் பாடம் நடத்தினார். அதனால் அவர் மீது மாணவர்களுக்கு கூடுதல் மரியாதை ஏற்பட்டுள்ளது. அவர் ஆசிரியர் பணியில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு மாணவர்கள் அளித்த பிரியாவிடை தான், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஓய்வு பெற்ற ஆசிரியரை வண்டியில் அமர வைத்து மாணவர்கள் தெருவில் ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். ஆசிரியருடன் அந்த விழாவில் பங்கேற்ற அவரது மனைவியும் வண்டியில் அமர்ந்துள்ளார். அவர்கள் இருவரையும் மாணவர்கள் வண்டியில் வைத்து ஊர்வலம் நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை பகிரப்பட்ட இந்த வீடியோ 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இதுகுறித்து ஒரு பயனர், ``இதுபோன்ற காட்சியைப் பார்ப்பது மிகவும் அரிது'' என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், ``மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த ஆசிரியருக்கான இந்த பிரியாவிடை விழா உண்மையிலேயே மனதைக் கவர்ந்தது'' என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE