காரை துரத்திச் சென்று தாக்குதல் நடத்திய இளைஞர்கள்: வீடியோவை வெளியிட்ட போலீஸ்

By KU BUREAU

பெங்களூரு: மேம்பாலத்தில் சென்ற காரை இளைஞர்கள் சிலர் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சிலிக்கான் சிட்டி என்று அழைக்கப்படும் பெங்களூருவில் ரவுடிகளின் அட்டகாசம் அன்றாடம் அதிகரித்து வருகிறது. நெடுஞ்சாலைகளில் பைக்குகளில் வீலிங் செய்வது, பயணிகளைத் துன்புறுத்துவது போன்ற சம்பவங்கள் இவர்களால் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது மாரேனஹள்ளி மேம்பாலத்தில் பைக்கில் வந்த இளைஞர்கள் சிலர், காரை குறிவைத்து ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள், பாலத்தில் செல்லும் காரை கால்களால் தாக்கியதுடன் மிரட்டுகின்றனர். மற்றொரு பைக்கில் வந்த மூன்று வாலிபர்களும் கார் ஓட்டுநரை பயமுறுத்துகின்றனர். இந்த வீடியோவை பெங்களூரு போலீஸார் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதில், “சாலையில் வாகனம் ஓட்டும் த்ரில் ஸ்டேஷனுக்கு வந்தவுடனேயே மாறிவிடும். திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் சிறப்பாக இருக்கும், எங்கள் சாலைகளில் அல்ல" என்று அந்த வீடியோவிற்கு கேப்ஷன் தந்துள்ளனர். அத்துடன் கார் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ ஜூலை 26 அன்று வெளியிடப்பட்டு நான்கு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன் 11,000 லைக்குகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பலர் ஷேர் செய்துள்ளனர். இந்த பதிவிற்கு காவல் துறைக்கு பலர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE