மதுரா: சிறுவனை குரங்குகள் கூட்டமாய் தாக்கும் வீடியோ வெளியாகி உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டம், பிருந்தாவனத்தில் ஜூலை 12 அன்று நடந்த இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிருந்தாவனத்தின் இராதா மதன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் கிஷன்(5). சம்பவத்தன்று கோபால் தனது மகனை கடைக்குச் சென்று வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து மதன் மோகன் கோயில் படிகளில் கிஷன் இறங்கி நடந்துள்ளான். அப்போது தெருவில் இருந்த குரங்குகள் கிஷனை துரத்தி துரத்தி தாக்கின. அத்துடன் சிறுவனை தரதரவென்று இழுத்துச் சென்றன. குரங்குகளுக்குப் பயந்து சிறுவனைக் காப்பாற்ற அந்த பகுதியில் இருந்த பெண்கள் முன்வரவில்லை. இந்த நிலையில் சிறுவனை குரங்குகள் கடித்து குதறின.
அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் ஓடி வந்து குரங்குகளிடமிருந்து கிஷனை காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்து சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, பொதுமக்கள் கவனமாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
» கள்ளக்குறிச்சி விவகாரம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு!
» பாகிஸ்தான் வீரர்களைக் கேலி செய்தார்களா இந்திய வீரர்கள்? - அதிர்ச்சி வீடியோ