தரமற்ற சாலையில் திடீர் பள்ளம்: கொம்பு நட்டு, வேப்பிலை கட்டி, சந்தனம் பூசிய காஞ்சிபுர இளைஞர்கள்!

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உரிய தரத்துடன் போடப்படாத சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பள்ளத்தில் சிலர் மரக்கொம்பை நட்டு, அதற்கு சந்தனம் பூசி, வேப்பிலையை கட்டிவைத்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது கட்சிப்பட்டு. இந்தப் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. ஆனால், அந்த சாலை உரிய தரத்துடன் அமைக்கப்படாததால் ஒரு மாதத்திலேயே பள்ளம் விழுந்தது.

இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதி இளைஞர்கள் தரமின்றி அமைக்கப்பட்டதை பொதுவெளிக்கு எடுத்துச் செல்லும் விதமாகவும் அந்தப் பள்ளத்தின் அருகே யாரும் வராமல் தடுக்கவும் அதில் ஒரு கொம்பை நட்டு அதில் சந்தனம், மஞ்சள் பூசினர். அத்துடன், வழிபாட்டுக்கு உரிய இடம் போல் வேப்பிலையும் கட்டினர்.

இதனை வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் பரப்பினர். சாலை தரமின்றி அமைக்கப்பட்டதை சம்பந்தப்பட்ட அனைவரும் கவனிக்க வேண்டும் என்பதற்காக உள்ளூர் இளைஞர்கள் பரப்பிய இந்த வீடியோவை பலரும் பார்த்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE