8 ஜோடி இரட்டையர்கள் பயிலும் மிசோரம் தொடக்கப் பள்ளி: வைரலாகும் புகைப்படம்

By KU BUREAU

அய்சால்: மிசோரம் மாநிலத்தின் அய்சாலில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்று எதிர்பாராத வகையில் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. இங்குள்ள அரசுக்கல்லூரி வெங் தொடக்கப் பள்ளியில், இந்த கல்வியாண்டில் 8 ஜோடி இரட்டையர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இந்தக் குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிக அளவிலான இரட்டைக் குழந்தைகள் தங்களின் பள்ளி வகுப்பறைகளில் பயில இருப்பது ஆசிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரட்டையர்களில் 7 ஜோடி ஒத்த இரட்டையர்கள், ஒன்று சகோதர இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தகது. தனித்துவமான இந்த நிகழ்வு குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஹெச். லாவென்ட்லுங்கா கூறுகையில், "கடந்த காலங்களில் பள்ளியில் இரட்டையர்கள் சேர்ந்திருந்த போதிலும், ஒரே கல்வியாண்டில் 8 ஜோடி இரட்டையர்கள் சேர்ந்திருப்பது ஒரு சாதனையே. பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தில் நடந்த கலந்துரையாடலின் போது, எங்கள் பள்ளியின் பல்வேறு வகுப்புகளில் 8 ஜோடி இரட்டையர்கள் சேர்ந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தோம்.

இந்த இரட்டையர்கள் அய்வாலின் காலேஜ் வெங், ஐடிஐ மற்றும் சலேம் வெங் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வருகின்றனர். இந்த இரட்டையர்களுள் நான்கு ஜோடி பெண்கள், மூன்று ஜோடி ஆண்கள், ஒரு ஜோடி சகோதர இரட்டையர். எல்.கே.ஜி வகுப்பில் இரண்டு ஜோடி ஆண்கள், ஒரு சகோதர இரட்டையர், ஒரு ஜோடி பெண்கள், யு.கே.ஜி வகுப்பில் ஓர் ஆண்கள் ஜோடி, ஒன்றாம் வகுப்பில் ஒரு ஜோடி பெண்கள், மீதமுள்ள இரண்டு ஜோடி பெண்கள் இரண்டாம் வகுப்பில் படிக்கின்றனர்" இவ்வாறு தெரிவித்தார்.

இதில் சுவாரஸ்யமான விஷயம், இந்த அதிசய நிகழ்வின் சகோதர இரட்டையர்கள் தலைமையாசிரியர் லாவென்ட்லுங்கா வீட்டைச் சேர்ந்தவர்கள். அவரது மகன் ரெம்ருதிகா மற்றும் மகள் லால்ஸார்ஷோவி எல்கே.ஜி வகுப்பில் படித்து வருகின்றனர். ஜூலை 21ம் தேதி அவர்கள் 5 வயதை எட்டுகின்றனர்.

தலைமை ஆசிரியர் லாவென்ட்லுங்கா, அதே பகுதியில் உள்ள ரெவ். தியங்கா அரசுத் தொடக்கப் பள்ளியைப் பற்றியும் குறிப்பிட்டார். இங்கு நான்கு ஜோடி இரட்டையர்கள் இந்தாண்டு சேர்ந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE