மூக்கால் வேகமாக டைப் செய்து கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்!

By KU BUREAU

ஏ முதல் இஸட் வரையிலான ஆங்கில எழுத்துகளை மூக்கால் வேகமாக டைப் செய்பவர் என்ற கின்னஸ் சாதனை பட்டத்தை வென்றுள்ளார் இந்தியர் ஒருவர். அவர் தனது முந்தைய சாதனையை முறியடித்து, மூன்றாவது முறையாக இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

இது குறித்த வீடியோவை கின்னஸ் உலக சாதனை அதன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், வினோத் குமார் சவுத்ரி ஏ முதல் இஸட் வரையிலான ஆங்கில எழுத்துகளை இடைவெளிகளுடன் தனது மூக்கால் தட்டச்சு செய்கிறார். 44 வயதான வினோத் குமார் கடந்த 2023-ம் ஆண்டு, ஆங்கில எழுத்துகளை 27.80 விநாடிகளில் தட்டச்சு செய்து, ‘மூக்கினால் வேகமாக தட்டச்சு செய்பவர்’ என்ற பட்டத்தை வென்றார்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இதே சாதனையை 26.73 விநாடிகளில் தட்டச்சு செய்து தனது சாதனையை முறியடித்தார். தற்போது வினோத் குமார் 25.66 விநாடிகளில் ஆங்கில எழுத்துகளை தட்டச்சு செய்து தனது முந்தைய சாதனைகளை தானே முறியடித்துள்ளார்.

இந்தப் பட்டத்துக்காக வினோத் குமார் சவுத்ரி, QWERTY விசைப்பலகையில் ஆங்கில ரோமன் எழுத்துகளை தகுந்த இடைவெளிகளுடன் மூக்கினால் தட்டச்சு செய்யவேண்டியது இருந்தது.

தனது சாதனை குறித்து வினோத் குமார் கூறுகையில், "எனது தொழில் டைப் ரைட்டிங் செய்வது. அதனால், எனது வாழ்வாதாரமும், ஆர்வமும் உள்ள டைப் ரைட்டிங்-ல் சாதனை செய்ய விரும்பினேன். உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகளை நீங்கள் சந்திக்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. உங்களின் ஆர்வத்தினை நிலையாக வைத்திருக்க வேண்டும் என நான் நம்புகிறேன்" என்றார்.

தான், ‘இந்தியாவின் டைப்பிங் மேன்’என அறியப்படுவதாக கூறும் வினோத் குமார், பட்டத்தினை சாதனை வெல்வதற்காக மணிக்கணக்கில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டதாகவும், பயிற்சியின் போது பலமுறை தலைசுற்றி மயக்கம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

கின்னஸ் சாதனை இணையதளத்தின் தரவுகளின்படி, வினோத் குமார் சவுத்ரி ஆங்கில எழுத்துகளை 5.36 விநாடிகளில் வேகமாக தலைகீழாக (ஒற்றைக் கையால்) தட்டச்சு செய்தும், கைகளை பின்னல் வைத்த ஆங்கில எழுத்துகளை 6.78 விநாடிகளில் தட்டச்சு செய்தும் சாதனை படைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE