அனல்மின் நிலையங்களின் தேவையை பூர்த்தி செய்ய புதிய நிலக்கரி சுரங்கத்தை வாங்கும் தமிழக மின்வாரியம்

By KU BUREAU

சென்னை: அனல்மின் நிலையங்களின் தேவைக்காக புதிய நிலக்கரி சுரங்கத்தை தமிழ்நாடு மின்வாரியம் வாங்குகிறது.

தமிழ்நாடு மின்வாரியம் தனது அனல்மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாங்கி பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உடன்குடி மற்றும் உப்பூர் அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி அதிக அளவு தேவைப்படுகிறது. இதற்காக, புதிய நிலக்கரி சுரங்கத்தை மின்வாரியம் வாங்க தீர்மானித்தது.

இதன்படி, ஒடிசா மாநிலம் அங்கூல் மாவட்டத்தில் உள்ள சகிகோபால் ககுர்க்கி என்ற புதிய நிலக்கரி சுரங்கத்தை அடுத்த மாதம் வாங்குகிறது. 1,950 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சுரங்கத்தில் 4,500 டன் முதல் 5,200 டன் அளவு வரையிலான நிலக்கரி கிடைக்கும்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மத்திய நிலக்கரி துறை அமைச்சகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 103 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டது. இந்த ஏலத்தில் தமிழ்நாடு மின்வாரியமும் பங்கேற்றது. குறிப்பாக, சகிகோபால் நிலக்கரி சுரங்கத்தை ஏலம் எடுக்க மின்வாரியம் விண்ணப்பித்தது.

2-வது முறையாக ஏலம்: இந்த ஏலத்தில் வேறு மாநிலங்களை சேர்ந்த எந்த மின் நிறுவனமும் பங்கேற்காததால், விதிப்படி இந்த ஏலம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மீண்டும் கடந்த பிப்ரவரி மாதம் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் தமிழ்நாடு மின்வாரியம் மீண்டும் பங்கேற்றது.

இந்த ஏலத்திலும் வேறு எந்த மாநில மின்நிறுவனங்களும் பங்கேற்கவில்லை. எனினும், ஏல விதிப்படி 2-வது முறை விடப்படும் ஏலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவில்லை எனில், ஏலத்தில் பங்கேற்ற அந்த ஒரு நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்படும்.

இறக்குமதி குறைக்கப்படும்: அந்த வகையில், தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சகிகோபால் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு அடுத்த மாதம் செய்யப்படும். இந்த சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்படுவதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் நிலக்கரியின் அளவு குறைக்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE