கும்பகோணத்தை புதிய மாவட்டமாக்க வேண்டும்: ஏப்.19-ல் எம்.பி., எம்எல்ஏக்கள் அலுவலகம் முற்றுகை!

By KU BUREAU

தஞ்சை: கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஏப்.19-ம் தேதி எம்.பி., எம்எல்ஏக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

கும்பகோணம் புதிய மாவட்ட கோரும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு கலந்தாய்வு கூட்டம் கும்பகோணத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமை வகித்து கூறியது: கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற 25 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி 2019-ம் ஆண்டில் இருந்து போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களுக்குள் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிப்பேன் என தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி அளித்தார். அதன்பேரில் கும்பகோணம், திருவிடை மருதூர், பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தனர். 3 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று, 1,500 நாட்களை கடந்தும் இதுவரை கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்காதது இப்பகுதி மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் ஆகியோர், அண்மையில் தமிழக முதல்வரை சந்தித்து மனு அளித்தும், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய மாவட்டத்தை அறிவிக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

எனவே, இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க‌.அன்பழகன் அலுவலகம் முன்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமையிலும்,

எம்.பி. கல்யாணசுந்தரம் அலுவலகம் முன்பு சதீஷ்குமார் தலைமையிலும், உயர்கல்வித் துறை அமைச்சரும், திருவிடைமருதூர் எம்எல்ஏவுமான கோவி.செழியன் அலுவலகம் முன்பு குடந்தை அரசன் தலைமையிலும் ஏப்.19-ம் தேதி காலை 11 மணிக்கு முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாநகரச் செயலாளர்கள் அதிமுக ராமநாதன், அமமுக குருமூர்த்தி, நாம் தமிழர் கட்சி ஆனந்த், தேமுதிக மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.சங்கர், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் சதீஷ்குமார், தமாகா மாநகரத் தலைவர் அருண், விடுதலை தமிழ்ப்புலி கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், கும்பகோணம் வர்த்தக சங்கத் தலைவர் கே.எஸ்.சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE