பழநியில் 10 நாட்களில் 8.27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்; அலைமோதும் மக்கள் வெள்ளம்!

By KU BUREAU

பழநி: தமிழ் புத்தாண்டையொட்டி பழநி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பத்து நாட்கள் நடந்த பங்குனி உத்திர திருவிழாவில் 8.27 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், காலை 4.30 மணிக்கு விளா பூஜை நடைபெற்றது. தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை மாதப் பிறப்பை முன்னிட்டு ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை முதலே வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் ரோப் கார், வின்ச் ரயிலில் செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் 2 மணி நேரம் வரை காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். முடி இறக்கம் செய்யும் இடத்திலும் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

மலைக்கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் வரை காத்திருந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நிறுத்தப்பட்ட தங்கரதப் புறப்பாடு 4 நாட்களுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. அதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி ஏப்.10 முதல் ஏப்.12-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் இலவசமாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, கடந்த ஏப்.10ம் தேதி 94,453 பேர், 11ம் தேதி 74,008 பேர், 12ம் தேதி 94,456 பேர் என மொத்தம் 2.67 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. திருவிழா தொடங்கிய ஏப்.5-ம் தேதி முதல் விழாவின் 10-ம் நாளான நேற்று மாலை வரை, 10 நாட்களும் 8.27 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். தமிழ் புத்தாண்டையொட்டி பழநி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயில், கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE