புதுச்சேரி: நீண்ட விடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பிரிவுகளும் இயங்கிய நிலையில் ஜிப்மரில் புற்றுநோய் மையத்தில் நீண்டவரிசையில் நோயாளிகள் காத்திருந்தனர். கூடுதல் கவுன்டர்கள் திறக்க உதவியாளர்கள் கோரினர்.
மத்திய அரசு விடுமுறை தினங்களில் ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என தற்போது அறிவிக்கப்படுகிறது. அதன்படி வரும் ஏப்ரல் 10ம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்திலும், வரும் ஏப்ரல் 14ம் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை யொட்டியும் ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கவில்லை. இத்தினங்களுக்கு நடுவே வெள்ளி, சனி, ஞாயிறு இருந்தது. அதனால் வெள்ளியைத் தவிர்த்து கடந்த வியாழன் தொடங்கி திங்கள்கிழமை வரை விடுமுறை தினங்கள் அதிகமாக இருந்தன.
இந்நிலையில் ஜிப்மர் அனைத்துப் பிரிவுகளும் இன்று இயங்கின. அதனால் ஜிப்மரில் வழக்கத்தை விட கூடுதலாக மக்கள் குவிந்தனர். குறிப்பாக ஜிப்மரில் உள்ள பிராந்திய புற்றுநோய் மையத்தில், நோயறிதல் மற்றும் ரத்த பரிசோதனை ஆகியவற்றுக்கு முன்னெப்போதும் இல்லாத நீண்ட வரிசையில் பலரும் காத்திருந்தனர்.
இதுபற்றி பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் கூறுகையில், "நீண்ட விடுமுறைக்குப் பிறகு, நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் ஜிப்மர் உயர்தர மருத்துவ நிறுவனமாக இருப்பதால், நீண்ட வரிசையை நிர்வகிக்க கூடுதல் கவுன்டர்களைத் திறந்திருக்க வேண்டும்.
நாள்பட்ட புற்றுநோய் நோயாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் சோதனைகளைச் செய்ய இவ்வளவு நீண்ட வரிசையில் நிற்பது மிகவும் வேதனையான அனுபவமாகும். குறிப்பாக நீண்ட விடுமுறைக்குப் பிறகு இதுபோன்ற நிலைமைகளை அறிந்து, நீண்ட வரிசைகளை நிர்வகிக்க, குறிப்பாக நாள்பட்ட நோயாளிகளுக்கு மனிதாபிமான முறையில் சிகிச்சையளிக்க வேண்டும், பிற பிரிவுகளிலிருந்து கூடுதல் நோயறிதல் குழுக்களை நியமிக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.