தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்ஐவி தொற்று: அமைச்சர் சுப்ரமணியன் அதிர்ச்சி தகவல்

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்புள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கடையநல்லூர் எம்எல்ஏ செ.கிருஷ்ணமுரளி எச்ஐவி நோய்த் தொற்றாளர்களுக்கு ஓய்வூதியத்தை அரசு உயர்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

அதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசும்போது, “தமிழகத்தில் 1 லட்சத்து 57,908 நபர்கள் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 1 லட்சத்து 41,341 பேர் கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு 76 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலம் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

இதுதவிர எச்ஐவி தொற்றாளர்களின் குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி ரூ.5 கோடி வைப்பு நிதியை கொடுத்தார். அது தற்போது ரூ.25 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்மூலம் எச்ஐவியால் பதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட 7618 குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுக்காக ரூ.1.81 கோடி செலவிடப்பட்டுள்ளது. எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE