50 தொகுதிகளின் தலையெழுத்தை அரசு ஊழியர்கள் நிர்ணயிப்பார்கள்: ஐபெட்டோ அண்ணாமலை கருத்து

By KU BUREAU

மயிலாடுதுறை: ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்வு பெற்றவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐம்பெரும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் சீ.பாலாஜி என்ற கல்யாணரங்கன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தங்க.சேகர் வரவேற்றார். அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் சா.புண்ணியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணா மலை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று,

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், ஜாக்டோ ஜியோ, ஐபெட்டோ, டெக்டோ ஜியோ சார்பில் போராட்டம் நடத்தியும் கூட இதுவரை பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 8வது மாநிலமாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். இதுகுறித்து சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்.

கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. பின்னர் அத்துறைக்கு இத்தனை ஐஏஎஸ் அதிகாரிகள், துணை, இணை இயக்குநர்கள் ஏன் ?. பெற்றோரை கொண்டாடுவோம் போன்ற, வெறும் விளம்பரத்தின் மூலமாக கல்வியை வளர்த்து விட முடியாது. ஆகையால் உடனடியாக ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படாமல் போராடி வருகின்றனர். அவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE