'எங்கள் கட்சியும் தமிழகத்தில் ஒரு நாள் ஆட்சியமைக்கும்' - முத்தரசன் அதிரடி

By KU BUREAU

நாகை: அமைச்சர் பொன்முடியின் பகிரங்க மன்னிப்பை ஏற்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

நாகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், அம்பேத்கர் படத்துக்கு நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சைவம், வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடி பேசிய கருத்து தவறானது. அதற்காக அவரை கட்சி பதவியில் இருந்து முதல்வர் நீக்கியுள்ளார். மேலும், அமைச்சர் பொன்முடியின் பகிரங்க மன்னிப்பை ஏற்க வேண்டும். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத் திலும் பங்கு என காங்கிரஸ் தொண்டர் எவரோ ஒருவர் செய்த தவறுக்காக திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் ஏற்படாது. ஒவ்வொரு கட்சியும் ஆளுங்கட்சியாக வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

எங்கள் கட்சியும் தமிழகத்தில் ஒரு நாள் ஆட்சி அமைக்கும், அதற்காகத்தான் கட்சி நடத்திக் கொண்டு இருக்கிறோம். ஊழல் குற்றத்துக்கு நீதிமன்ற த்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் அதிமுகவை, பழனிசாமியை வைத்துக்கொண்டு ஊழலை பற்றி பேச மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு அருகதை இல்லை. அதிமுக தொண்டர்கள் பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை.

பாஜக, தன்னுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளை நயவஞ்சகமாக அழித்துவிடும். பாஜக கூட்டணியில் அதிமுக தானாக சேர்ந்ததா ? அல்லது நிர்பந்தத்தால் சேர்ந்ததா ? எனத் தெரியவில்லை. தமிழக மக்கள் பிரச்சினையில் முதல்வர் பேசும்போது ஆதரவு அளித்த பழனிசாமி, இன்று தமிழகத்தை காட்டி கொடுத்து எட்டப்பனாக மாறிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, நாகை எம்.பி செல்வராஜ், மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE