காட்டுமன்னார்கோவில் அருகே சோகம்: ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

By KU BUREAU

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே வடக்கு கொளக்குடி அருகில் உள்ளது ஜாகிர் உசேன் நகர். இப்பகுதியைச் சேர்ந்த முஜிபுல்லா மகன் உபயத்துல்லா (8), ஜாபர் சாதிக் மகன் முகமதுஅபில் (10), சாதிக் பாட்ஷா மகன் ஷேக் அப்துல் ரஹ்மான் (13) உள்ளிட்ட 5 சிறுவர்கள் நேற்று காலை அப்பகுதியில் உள்ள வெள்ளியங்கால் ஓடைக்கு குளிக்க சென்றனர்.

அப்போது ஓடையில் உள்ள பள்ளத்தில் உபயத்துல்லா, முகமதுஅபில், ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகிய 3 பேரும் தவறி விழுந்து மூழ்கினர். இதைக் கண்டு அவர்களுடன் குளிக்கச் சென்ற மற்ற இரு சிறுவர்கள் அலறியுள்ளனர். உடனே அப்பகுதியில் இருந்த சிலர் ஓடையில் இறங்கி தேடினர். ஆனால் 3 சிறுவர்களும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையததுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 3 மணி நேர தேடலுக்குப் பின்னர், 3 சிறுவர்களின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். காட்டுமன்னார்கோவில் போலீஸார் 3 சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டு மன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE