சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்ற இருவர் மலைப்பாதையில் தவறி விழுந்த போது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச் சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவுப்படி ஏப்ரல் 3ம் தேதி முதல் தினசரி மலையேறிச் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. விடுமுறை நாளான நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை 1,300-க்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்றனர். சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பிற்பகலுக்கு மேல் பக்தர்கள் அடிவாரம் திரும்பிக் கொண்டிருந்தனர்.
நேற்று மாலை சங்கிலி பாறை ஒடை அருகே பாறையில் இறங்கிய போது, ஈரோட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் பாலாஜி (23), மதுரையை சேர்ந்த பெயிண்டர் கவி ராஜ் (34) ஆகியோர் தவறி விழுந்தனர். இதில் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பக்தர்கள் இருவரையும் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.