தருமபுரி: பழையூரைச் சேர்ந்த திருவண்ணாமலை (36) என்பவர், கடந்த 6ம் தேதி இருசக்கர வாகனத்தில் மேச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சாலையில் நடந்து சென்ற மாரியம்மாள் (32) என்பவர் மீது மோதியது. இதில் காயமடைந்த மாரியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது சம்பந்தமாக மேச்சேரி போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தை காவல் நிலையம் கொண்டு வருமாறு செல்போனில் கடந்த 5 நாட்களாக திருவண்ணாமலையிடம் மேச்சேரி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்த ராஜ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
ஆனால் அவர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்த ராஜ், ஆபாச வார்த்தைகளால் திட்டி திருவண்ணாமலைக்கு மிரட்டல் விடுத்துள்ளார். தற்போது இந்த ஆடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, எஸ்பி கவுதம் கோயல் உத்தரவின் பேரில், சேலம் காவல் ஆயுதப்படைக்கு கோவிந்த ராஜ் மாற்றப்பட்டார்.