மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணையதளத்தில் பதிவேறாத சித்திரைத் திருவிழா: பக்தர்கள் சிரமம்

By KU BUREAU

மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணையதளத்தில் சித்திரைத் திருவிழா தொடர்பான பதிவேற்றம் எதுவும் இல்லாததால் வெளியூர் பக்தர்கள் திருவிழா பற்றி தெரிந்து கொள்ள முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.

மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். அதன்படி நடப்பாண்டு மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, முக்கிய விழாவான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் மே 6-ம் தேதியும், மே 7-ம் தேதி திக்கு விஜயம், மே 8-ம் தேதி திருக்கல்யாணம், மே 9-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. மே 10ம் தேதி தீர்த்தவாரி பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

அதேபோல், கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி சித்திரை பவுர்ணமியான மே 12-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடைபெறவுள்ளது. இதில் கள்ளழகர் கோயிலிலிருந்து சித்திரைத் திருவிழா அறிவிப்புகள் கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டது. ஆனால் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளி வரவில்லை. மேலும், கோயிலின் இணைய தளத்தில் சித்திரைத் திருவிழா பற்றிய அறிவிப்புகள் இல்லாததால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து பக்தர் மணிகண்டன் கூறுகையில், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள்ளூரைத் தவிர வெளியூர், வெளி மாநில பக்தர்கள், வெளி நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வெளியூர், வெளிமாநில பக்தர்கள் இணையதளம் மூலம் தரிசனம், கட்டளைகள் ஆகியவற்றுக்கு பதிவு செய்து வருகின்றனர். சி்த்திரைத் திருவிழா பற்றி வெளியூர் பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

திருவிழாவில் பங்கேற்க முன்கூட்டியே திட்டமிட முடியாமல் தவிக்கின்றனர். உதாரணத்துக்கு திருப்பதி கோயில் பற்றிய தகவல்கள் இணைய தளத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன. இதன் மூலம் வெளிமாநில பக்தர்கள் எளிதாக தரிசனத்துக்கும், அங்கு கட்டளைகள் பதிவு செய்யவும் எளிதாக உள்ளது. அதேபோல், மீனாட்சி அம்மன் கோயில் இணையதளத்தையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்து பக்தர்களுக்கு உதவிட வேண்டும் என்றார்.

இது குறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, சித்திரைத் திருவிழாக்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக விவரம் வெளியிடப்பட வில்லை. இது குறித்து சென்னை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்திடம் ஒப்புதல் கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் அறிவிப்பு வெளியிடப்படும். அது தொடர்பான தகவல்களையும் இணையதளத்தில் பதிவேற்றுவோம். மேலும் இணைய தளங்கள் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பராமரிக்கப்படுகின்றன. இதுதொடர்பான தகவல்களையும் கொண்டு செல்வோம், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE